பட்டாசு வெடித்து தந்தை மற்றும் மகன் பலி ; CCTV காட்சியில் வெளியான அதிர்ச்சி வீடியோ  


பைக்கில் இருந்த பட்டாசு மூட்டை வெடித்து விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே  தந்தை மற்றும் மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது 

cctv

மரக்காணத்தில் பைக்கிலிருந்த பட்டாசு மூட்டை வெடித்து, சம்பவ இடத்திலேயே தந்தை-மகன் உயிரிழந்த விபத்தில், நெஞ்சை பதை பதைக்க வைக்கும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது

புதுச்சேரி காக்கயான் தோப்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதான கலைநேசன், தமிழகப்பகுதியான கூனிமேட்டில் இருந்து தமது 7 வயது மகன் பிரதீசுடன், 2 சாக்கு மூட்டைகளில் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி சென்றுள்ளார். கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் சென்றபோது, பைக்கில் இருந்த நாட்டு பட்டாசுகள், எதிர்பாராத விதமாக வெடித்தது. அப்போது, தந்தையும் மகனும் குறிப்பிட்ட தூரம் தூக்கி வீசப்பட்ட நிலையில், இருவரும் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், அருகே இருந்த வாகனம் மற்றும் வீட்டின் கூரைகள் சேதமடைந்து, அந்த சாலை முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த வெடிவிபத்து சம்பவம் நடைபெற்ற போது, அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஷர்புதீன் மற்றும் கணேசன் படுகாயமடைந்தனர். இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வெடி பொருள் வீரியம் அதிகமாக இருந்ததால் உடல் மற்றும் வாகன பாகங்கள் 300 மீட்டர் தூரம் வரை தூக்கி வீசிப்பட்டது. அருகே இருந்த வாகனம் மற்றும் வீட்டின் கூறைகள் சேதமடைந்து அந்த சாலை முழுவதும் போர்க்களம்போல் காட்சியளித்தது. சம்பவ இடத்தில், விழுப்புரம் டி.ஐ.ஜி, எஸ்.பி. ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்நிலையில், பட்டாசு மூட்டை வெடித்து சிதறும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி, காண்போரின் நெஞ்சை பதை பதைக்க வைத்துள்ளது. தீபாவளி நாள் அன்று தந்தை மற்றும் மகன் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது