மதுரையில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை கொடுத்து மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

court

மதுரையில் சிறுமி மற்றும் தாய் தந்த புகாரில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மதுரையில் மதுபானம் குடிக்கும் பழக்கம் உள்ள நபர் ஒருவர் குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டும் வழக்கம் போல் குடித்து விட்டு வந்த சிறுமியின் தந்தை வீட்டில் தனியாக இருந்த மகளிடம் சில்மிஷம் செய்துள்ளார். வீட்டில் தாய் இல்லாததால் சிறுமி தப்பிக்க முயல சிறுமியை கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமி வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய தாயிடம் மகள் நடந்ததை கூற போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்றுக்கொண்ட மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தந்தையை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு சென்றது.

மேலும் இந்த வழக்கு மதுரை மாவட்டம் போக்சோ நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. வழக்கு போக்சோ நீதிமன்ற நிதிபதி ராதிகா முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கில் மகளை பெற்றத் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து  போலீசார் அவரை மத்திய சிறைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர். தந்தைக்கு தண்டனை கொடுத்திருப்பதால், மகளும், கணவனுக்கு தண்டனை கிடைத்ததால் மனைவியும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் கொடுமை சம்பவங்கள் நடந்து வரும் சூழலில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்.