கோவையைத் தொடர்ந்து கரூரில் டாக்டர் ஒருவர், பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் பகுதியில் உள்ள வடக்கு பிரதட்சணம் சாலையில்  ரஜினிகாந்த் என்பவர், எலும்பு முறிவு மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.

இவரது மருத்துவமனையில் பணி புரியும் பெண் ஊழியர் ஒருவரின் 17 வயதான மகள், அந்த மருத்தவமனையின் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். 

தனது தாயார் பள்ளியின் அருகிலேயே உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வருவதால், அந்த மாணவி தினமும் பள்ளி முடிந்ததும் அந்த மருத்துவமனைக்கு வந்து, பணி முடிந்ததும் தாயுடன் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதனால், அந்த மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களிடமும், அங்கு பணியாற்றும் சக டாக்டர்களிடமும் சகஜமாக இந்த பள்ளி மாணவி பழகி வந்திருக்கிறார். 

இந்த சூழலில் தான், இந்த சிறுமியின் தாயார் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு பணிக்கு வராமல் விடுமுறையில் இருந்ததால், பள்ளி முடிந்ததும் அன்றைய தினம் மாலை தாயாரின் சம்பளப் பணத்தைப் பெற்றுக் கொள்ள, அந்த பள்ளி மாணவி மருத்துவமனைக்குச் சென்று உள்ளார்.

அவ்வப்போது, அந்த பள்ளி மாணவியை அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ரஜினிகாந்த், தனியாக தனது அறைக்கு அழைத்துச் சென்று அந்த சிறுமியிடம் அத்து மீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, மருத்துவர் ராஜினிகாந்தின் இந்த சீண்டலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு, அந்த அறையில் இருந்து கூச்சலிட்டபடியே வெளியே ஓடி வந்திருக்கிறார். 

இதனையடுத்து, வீடு திரும்பிய அந்த சிறுமி, இது குறித்து தனது தாயிடம் கூறி அழுது உள்ளார். 

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், மருத்துவர் ரஜினிகாந்த் மீது கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். 

இதனையடுத்து, அனைத்து மகளிர் போலீசார், சம்மந்தப்பட்ட டாக்டர் ரஜினிகாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரது மேலாளர் சரவணன் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், இந்த விசாரணைக்குப் பயந்து டாக்டர் ரஜினிகாந்த் தற்போது தலைமறைவாகி இருப்பதால், மருத்துவமனை மேலாளர் சரவணனை போலீசார் அதிரடியாக கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், அந்த பெண் தற்கொலை கொண்ட நிலையில், தற்போது கரூரில் பள்ளி மாணவிக்கு டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.