இந்திய திரை உலகின் மிகப் பெரிய ஆளுமையாக விளங்கும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இதுவரை இந்தியத் திரையுலகம் கண்டிராத பிரம்மாண்ட படைப்பாக தயாராகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளன.

இசைப்புயல் ஏ.ஆர.ரஹ்மான் இசையமைக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம், வல்லவரையன் வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யாராய், குந்தவையாக த்ரிஷா, பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சிறிய பழுவேட்டரையராக பார்த்திபன், ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் ஆகியோர் நடிக்க பொன்னியின் செல்வனாக அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம்ரவி நடித்துள்ளார்.

இந்த ஆண்டு(2022) செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மணிரத்னம் வெளியிடவுள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரவு நிழல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.