சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, அடையாறு ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக உருமாறி உள்ளது. இந்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை காரைக்காலுக்கும், ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் வட தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு முழுக்க விடிய விடிய மழை பெய்தது.

சென்னையில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை விடாமல் இப்போது வரை பெய்து கொண்டு இருக்கிறது. இரவு முழுக்க மழை பெய்த காரணத்தால் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை காரணமாக அதிக வெள்ளம் ஏற்பட்ட, தி.நகர், வேளச்சேரி பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

a1

சென்னையில் வேளச்சேரி, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, தி.நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் எல்லாம் சாலைகளில் நீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

சென்னையில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த மழையால் மேலும் வெள்ளம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிமேல்தான் சென்னையில் மழை தீவிரம் எடுக்கும். பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

a2

இந்நிலையில், சென்னையில் 18 மணி நேரமாக கனமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக அடையாறு ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் கரையை ஒட்டியுள்ள பெருங்களத்தூர், தாம்பரம், முடிச்சூர், மண்ணிவாக்கம் ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.