“சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு, தாம்பத்ய உரிமைக்காக பரோல் எல்லாம் தர முடியாது” என்று, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு அளித்து உள்ளது.

“கோவை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு ஒன்றில், சிறையில் உள்ள எனது கணவருக்கு கருத்தரிப்பு சிகிச்சைக்காக பரோல் வழங்க வேண்டும்” என்று, அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவை ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவானது, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அதாவது, இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, “ஏற்கனவே கருத்தரிப்பு சிகிச்சைக்காக 2 வாரங்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், மேலும் 2 வது முறையாக மனுத் தாக்கல் செய்து உள்ளதாக” நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், “தாம்பத்ய உரிமைக்காக பரோல் வழங்க சிறை விதிகள் வகை செய்யவில்லை என்பதால், இது தொடர்பான விரிவான தீர்ப்பு வழங்கும் வகையில், இந்த வழக்கை அடுத்த 3 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு விசாரணைக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதனையடுத்து, தற்போது பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய 3 பேர் கொண்ட அமர்வு, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து தற்போது தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதன்படி, “குற்றம் செய்து சிறையில் தண்டனை அனுபவித்து வரும் தண்டனைக் கைதி ஒருவர், சாதாரண பொது மக்கள் அனுபவிக்கும் சுதந்திரங்களை அனுபவிக்க அனுமதிக்க முடியாது” என்று, திட்டவட்டமாக கூறியுள்ளது. 

“அப்படி, சாதாரண பொது மக்கள் அனுபவிக்கும் சுதந்திரங்களை கைதிகளும் அனுமதிப்பது சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் குடி மக்களுக்கும், சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என சட்டம் சொல்கிறது என்பதையும்” நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். 

அத்துடன், “கைதிகளுக்கு தாம்பத்ய உரிமையை வழங்க முடியாது” என்றும், இந்த 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு, அதிரடியாக தீர்ப்பும் அளித்து உள்ளது.

மேலும், “அசாதாரண காரணங்களுக்காக பரோல் வழங்க விதிகள் வகை செய்து உள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குழந்தைகள் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கைதிக்கு கருத்தரிப்பு சிகிச்சை பெற பரோல் வழங்கலாம்” என்றும், சுட்டிக்காட்டி உள்ளது. 

அதே போல், “ஏற்கனவே கைதிகளுக்கு குழந்தைகள் இருந்தால், இந்த காரணத்தை கூறி அவர்களுக்கு பரோல் வழங்க முடியாது” என்றும், நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பு அளித்து உள்ளனர். நீதிபதிகள் வழங்கிய இந்த தீர்ப்பு, தற்போது வைரலாகி வருகிறது.