டெல்லியில் மத்திய அரசால் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்திகள் அனைத்தும், சென்னை குடியரசுதின விழாவில் அணிவகுப்பு சென்றது பொது மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

“டெல்லி குடியரசு தின அணி வகுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான வஉசி, மகாகவி பாரதியார், வேலுநாச்சியார், மருது சகோதரர்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிராகரித்தது ஏன்” என்பது தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் பின்னணி தகவல்கள் கடந்த வாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட அந்த அலங்கார ஊர்திகள் அனைத்தும், சென்னை குடியரசுதின விழாவில் அணிவகுத்து நின்றன.

அதன்படி,

முதல் அலங்கார ஊர்தியாக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள ஊர்தி இடம் பெற்றிருந்தது. இதில், “தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி குழுவினரின் நாதஸ்வரம், தவில், வீணையுடன் கூடிய மங்கள இசை” இடம் பெற்றிருந்தது.

2 வது அலங்கார ஊர்தியில், “வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோரது சிலைகளுடன் வேலூர் கோட்டை, காளையார்கோவில் கோபுரம்” ஆகியவை இடம் பெற்று அணி வகுத்து வந்தன.

3 வது அலங்கார ஊர்தியில், “சுதந்திரத்துக்காக பாடுபட்ட வ.உ.சி. செக்கு இழுக்கும் நிகழ்வு, மகாகவி பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி மற்றும் அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களை காட்சிப்படுத்தும் தத்ரூப சிலைகளுடன் சுதேசி கப்பலும் இடம் பெற்றது அணி வகுத்து வந்தது”, காண்பதற்கு கண்கொள்ளக் காட்சியாக இருந்தது.

4 வது அலங்கார ஊர்தியில், “பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், இரட்டைமலை சீனிவாசன், வ.வே.சு.அய்யர், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், காமராஜர், காயிதே மில்லத், ஜோசப் சி குமரப்பா ஆகிய தலைவர்களை சித்தரிக்கும் சிலைகள்” இடம் பெற்று அணி வகுத்து வந்தன.

இப்படியாக, தமிழரின் வீரம், தியாகம் என்று தமிழர்களின் சுதந்திரப் போராட்ட பெருமைகளை உலகிற்கு பறைசாற்றும் வகையில், தமிழக அலங்கார ஊர்திகள் அலங்கரிக்கப்பட்டு அணி வகுத்துச் சென்றன.

குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்திகள் சென்னை கடற்கரை சாலையில் அணி வகுத்தன.

குறிப்பாக, டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க உருவாக்கப்பட்ட இப்படியான தமிழக ஊர்திகளை மத்திய அரசு நிராகரித்து இருந்த நிலையில் தான், இந்த வாகனங்கள் தமிழகம் முழுவதும் இன்று முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. 

அந்த முக்கிய நிகழ்வை, இன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஊர்தி மூன்று ஊர்திகளாக பிரிக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.