73 வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக் கொடியேற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, மரக்கன்று பசுமை கூடை வழங்கி வரவேற்பு தெரிவித்தார். 

அத்துடன், சென்னை மெரினாவில் தொடர்ச்சியாக நடைபெற்ற குடியரசு தின அணி வகுப்பு நிகழ்வில் முப்படைகளின் மண்டல தலைமை அதிகாரிகள், தமிழக டிஜிபி உள்ளிட்டோரை ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து,  சென்னை மெரினா கடற்கரையில் நாட்டின் 73 வது குடியரசு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். தமிழக ஆளுநர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்த அந்த தருணத்தில், ஹெலிகாப்டர் மூலமாக மலர்கள் தூவப்பட்டது, பார்ப்பதற்கே பரவசத்தை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோரும் உடன் இருந்தனர்.

குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் ஆளுநர் ரவி, தேசியக் கொடியேற்றியது இதுவே முதல் முறையாக அமைந்திருந்தது.

அதன் தொடர்ச்சியாகவே முப்படையினர், தமிழக காவல் துறையினர் உள்ளிட்டோரின் அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது. இதனை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம் ,கோட்டை அமீர் மதநல்லிணக்கம் சிறந்த காவல் நிலையத்திற்கு முதலமைச்சரின் கோப்பைகள் ஆகிய பதக்கங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

அந்த வகையில், சென்னையில் உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கிச் சென்ற டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு அண்ணா பதக்கத்தை, தமிழக முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார்.

அதே போல், திருவொற்றியூரில் கட்டட விபத்தின்போது காப்பாற்றிய தனியரசுவுக்கு வீரதீர செயலுக்கான பதக்கம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் வீரத் தீர செயல்களை நினைவுக்கூறும் வகையில், தமிழர்களின் சுதந்திர தியாகத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளின் அணி வகுப்பு நடைபெற்றது. இதனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ரவி உள்ளிட்டோர் அனைவரும் பார்வையிட்டு கண்டு ரசித்தனர்.

இதனிடையே, “இந்த குடியரசு நாளில் அரசியலமைப்பின் மதசார்பின்மை, பண்பினை உயர்த்தி பிடிக்க உறுதி ஏற்று, அனைத்து துறைகளிலும் நம் மக்களை முன்னேற்றுவதில், நாம் புரிந்த சாதனைகளை எண்ணி பெருமிதம் கொள்வோம்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.