தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் மேற்கு வங்க கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த அசானி வலுவிழந்து புயலாக நிலைகொண்டுள்ளது. இது வடக்கு- வடகிழக்கு திசையில் வடஆந்திரா கடலோர பகுதிகளின் வழியாக நகர்ந்து இன்று இரவு மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து 12-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 95 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சூறாவளி காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் ஆந்திர கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சூறாவளி காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஒரிசா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ் கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.