“அசானி புயல் எதிரொலியாக சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்” என்று, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் தொடங்கி, அக்னி நட்சத்திரமும் தொடங்கி வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது.

இந்த சூழலில் தான், சென்னையை தவிர்த்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்த நிலையில், சென்னையில் மட்டும் வெயில் வாட்டி எடுத்து வந்தது.

இப்படியான சூழ்நிலைக்கு மத்தியில் தான், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது. 

தற்போது, அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று, அது காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. ஆனால், அது நேற்று முன்தினம் காலையில்  குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறிப்போனது.

இதனால், “அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக” வானிலை ஆய்வு மையம் கூறியது.

ஆனால், இன்றைய தினம் முன்னதாக “அசானி புயல் எதிரொலியாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்” என்றும், வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

அதன் படி “திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும்” என்றும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த சூழலில் தான், சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

அத்துடன், இன்று காலை முதல் தற்போது வரை சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் திடீரென்று கன மழையும் பெய்தது.

அந்த வகையில், சென்னையின் முக்கிய பகுதிகளான எழும்பூர், புரசைவாக்கம், கோயம்பேடு, வடபழனி, மயிலாப்பூர், அடையாறு, அண்ணாநகர், ராயபுரம், பெரம்பூர், மாதவரம், வியாசர்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது.

அதே போல், சென்னையின் புற நகர் பகுதிகளான மதுரவாயல், குன்றத்தூர், மடிப்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், செங்குன்றம், புழல் உள்ளிட்ட புறநகர் பகுதியிலும் லேசான மழை பெய்தது. 

அதே போல், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் விட்டு விட்டு மழை பெய்தது.

அதாவது, சென்னை மக்கள் அனைவரும் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் வெப்பம் தாங்காமல் தவித்துக்கொண்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பெய் மழை, சென்னை மக்களை அதிகம் குளிர வைத்தது. 

இந்த திடீர் மழையால் சென்னை முழுவதும் குளிர்ந்த காற்றும், மழை தூறலும் தொடர்ந்து வருவதால், சென்னையில் அப்படியே வெப்பம் யாவும் தணிந்து, குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக, சென்னையில் பல மாதங்களுக்கு பிறகு பெய்த இந்த திடீர் மழையால், சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் தான், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்” என்று, தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ள அவரது டிட்டர் பதிவில், “சென்னைக்கு இன்னொரு மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், அதுவும் அசானி புயல் மேலும் மேலும் வலுவிழந்து தற்போது வட ஆந்திர கடற்கரையோரம் காக்கிநாடா - விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது” என்றும், பதிவிட்டு உள்ளார்.

“இதன் காரணமாக, சென்னைக்கு இன்னொரு மழைக்கு வாய்ப்பு இருக்கிறது” என்றும், தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.