சென்னை ஆர்.ஏ. புரம் விவகாரத்தில், 'ஆக்கிரமிப்பு பணிகளை நிறுத்த உத்தரவிட மாட்டோம்” என்று, உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்றும் விவகாரம், சென்னை மக்கள் மத்தியில் பெரும் பேசும் பொருளாக வைரலாகி வருகிறது.

அதாவது, சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் கோவிந்தசாமி நகர் ஒன்று இருக்கிறது. அங்கு, இளங்கோ தெரு பக்கிங்காம் கால்வாயை ஒட்டி உள்ளது. 

இந்த தெருவில் இருந்த 625 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனையடுத்து, குறிப்பிட்ட அந்த பக்கிங்காம் கரையோரம் இருந்த 366 வீடுகளும் அதிரடியாக அகற்றப்பட்டது. 

அத்துடன், அந்த அந்த பக்கிங்காம் கரையோரம் மீதம் இருந்த 259 வீடுகளை உடனடியாக அகற்ற நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனையடுத்து, அங்குள்ள வீடுகளை காலிபண்ணாமல் அடம் பிடிப்பவர்களின் வீடுகளில், வருவாய்த் துறை சார்பில் குறிப்பிட்ட வீடுகளில் அதிரடியாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

ஆனாலும், குறிப்பிட்ட சில கட்சிகளை பின்னணியாக கொண்டவர்கள், அங்கு வீடுகளை காலி செய்யாமல், அங்குள்ள மக்களை போராட்டத்திற்கு தூண்டி விடுவதாகவும் புதிய புதிய குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்த நிலையில் தான், போலீசார் உதவியுடன் இளங்கோ தெருவில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது.

இதனால், “ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதை எதிர்த்து” அப்பகுதியை சேர்ந்த பாமக பிரமுகர் கண்ணையா என்பவர், நேற்று முன்தினம் தீக்குளித்தார். அத்துடன், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், சென்னை ஆர்.ஏ. புரத்தில் வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. 

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரியும், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும்” என்றும், அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 

இந்த நிலையில் தான், உச்ச நீதிமன்ற நீதிபதி கான்வில்கர் அமர்வில் இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, “ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்படுவோருக்கு இடம் தயாராக உள்ளது” என்று, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், “சென்னை ஆர்.ஏ. புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்கப் போவதில்லை” என்றும், உச்சநீதிமன்றம் திட்டவட்மாக தெரிவித்தது.

 “கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது என்றும், மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என்றும்,  பாதிக்கப்பட்டோருக்கு மாற்று இடம் வழங்க வேண்டிய வேலையை அரசு செய்யும்” என்றும், கூறியது. 

குறிப்பாக, “ஆக்கிரமிப்பை அகற்றும் விவகாரத்தில் குறிப்பிட்ட காலம் அவகாசம் வழங்கினால், அதனை சம்பந்தப்பட்ட நபர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும், முதலில் காலி செய்வதற்கான நோட்டிசை சம்பந்தப்பட்டவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்றும், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

முக்கியமாக, “மாற்று இடம் வழங்குவதாக தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் அறிவித்து உள்ளது உறுதிமொழிதானே?” என்று, கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், “சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு வழக்கை தள்ளுபடி செய்வதாகவும்” உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்து உள்ளது.