திரையுலகில் நடிகராக அறிமுகமாகி தற்போது தனது கடின உழைப்பாலும் அசாத்திய திறமையாலும் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் நடிகர் தனுஷ் தனது திரைப்பயணத்தில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 

முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வரும் தனுஷ், ஹாலிவுட்டில் நடித்துள்ள தி கிரேட் மேன் ஆங்கில திரைப்படம் விரைவில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸாகவுள்ளது. அடுத்ததாக தனது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்திலும் தனுஷ் நடித்துள்ளார்.

இந்த வரிசையில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் வாத்தி (SIR). தனுஷுடன் இணைந்து சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  

வாத்தி படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றனர். ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில்,  நடிகர் தனுஷின் 20 வருட திரைப்பயணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வாத்தி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் வாத்தி படக்குழுவினர் வெளியிட்ட புதிய போஸ்டர் இதோ…