விஸ்வரூபம் 2 படத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜூலை 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் ஆண்டனி வர்கீஸ், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, சிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் விக்ரம் திரைப்படத்தை வெளியிடுகிறது.

முன்னதாக விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற மே 15 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில் இன்று மே 11ஆம் தேதி உலக நாயகன் எழுதி, பாடி, நடனமாடியுள்ள விக்ரம் படத்தின் முதல் பாடலாக பத்தல பத்தல பாடல் மாலை 7 மணி அளவில் ரிலீஸாகவுள்ளது.

அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகி இருக்கும் விக்ரம் திரைப்படத்திற்கு முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பறிவு மாஸ்டர்ஸ் பணியாற்றியுள்ளனர். இரட்டை சகோதரர்களான அன்பறிவு மாஸ்டர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்படும் மேக்கிங் வீடியோவை பகிர்ந்து அன்பறிவு மாஸ்டர்ஸ் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ…