“ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில், அரசுடைமையாக்கிப் பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது” என்று, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான “வேதா நிலையம்” நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று, இதற்கு முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. 

அத்துடன், இதனைச் செயல்படுத்தும் விதமாகச் சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையமும் அங்குள்ள அசையும் சொத்துகளும் அரசுடைமையாக்கப்பட்டன. 

இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதே போல், “வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்துப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும்” இந்த வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்து வந்தார். 

இந்த வழக்கின் விசாரணையின் போது, தமிழக அரசின் இந்த உத்தரவிற்குத் தீபா மற்றும் தீபக் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், தமிழக அரசின் தரப்பில், “வேதா நிலையத்தைக் கையகப்படுத்தும் முன்பே, அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாகவும்” விளக்கம் அளிக்கப்பட்டது.

இப்படியாக, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி, இந்த வழக்குகளின் மீதான தீர்ப்புகளைத் தேதி குறிப்பிடாமல் முன்பே தள்ளிவைத்திருந்தார்.

இந்த நிலையில் தான், இந்த வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதன் படி, நீதிபதி சேஷசாயி சற்று முன்பாக வழங்கியுள்ள இந்த வழக்கின் தீர்ப்பில், “ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது” என்று, அதிரடியாக அறிவித்தார். 

குறிப்பாக, “நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது என்றும். வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கி, தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்கிறோம்” என்றும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடியாக அறிவித்தார். 

மேலும், “வேதா நிலையத்தைத் தீபா, தீபக்கிடம் 3 வாரங்களில் ஒப்படைக்க உத்தரவிடுகிறோம்” என்று கூறிய நீதிமன்றம், “வேதா நிலையம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடங்கள் எதற்கு?” என்றும், கேள்வி எழுப்பினர்.

அத்துடன், “கீழமை நீதிமன்றத்தில் உள்ள தொகையில் வருமானவரி நிலுவை போக மீதியை தீபக் மற்றும் தீபாவிற்கு கொடுக்கலாம்” என்றும், சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.