அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் துக்ளக் தர்பார். லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. விஜய் சேதுபதி ஜோடியாக அதிதிராவ் ஹய்தாரி நடிக்கிறார். இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியுடன் இரண்டாவது முறையாக இணைகிறார் பார்த்திபன். 

இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியது. 96 புகழ் பிரேம் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் இயக்குனர் பாலாஜி தரணீதரன் திரைக்கதை எழுதுகிறார். படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை சமீபத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வழங்கியது. 35 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும், மீதம் உள்ள 40 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வரும் ஜூலை 8-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் விஜய்சேதுபதி ரசிகர்கள். இதுகுறித்து பதிவு செய்த இயக்குனர் டெல்லி பிரசாத், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றும் என்னுடன் துணையாக நிற்கும் விஜய்சேதுபதிக்கு நன்றி, என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் லலித் குமாருக்கு நன்றி என பதிவு செய்துள்ளார். 

இது தவிர்த்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி. XB பிலிம்ஸ் தயாரித்த மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. சமீபத்தில் மாஸ்டர் படத்தில் தான் கொடூரமான வில்லனாக நடித்துள்ளதாகவும், முழுக்க முழுக்க வில்லன் தான்.. துளி கூட நல்லவனே கிடையாது என்று தனது ரோல் பற்றி பேசினார். 

சீனு ராமசாமியின் மாமனிதன், மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, எஸ்.பி. ஜனநாதனின் லாபம், விருமாண்டியின் க.பெ. ரணசிங்கம், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர், அல்லு அர்ஜூனுடன் புஷ்பா, அமீர்கானுடன் லால் சிங் சத்தா போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது. லாக்டவுன் முடிந்தவுடன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.