சென்னையில் போலீசார் ஒருவர் நடத்திய வாகன சோதனையில், ஒரு பெண் மயங்கி கீழே சரிந்த சம்பவம் போலீசாரின் மனிதமற்ற செயலுக்கு மேலும் ஒரு உதாரணமாக அமைந்து போனது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சாத்தான் குளம் லாக்கப் டெத் சம்பவம் போலீசாருக்கு மிகப் பெரிய அளவிலான தலை குனிவையும், மிகப் பெரிய தலைவலியையும் ஏற்படுத்தி உள்ளது. இது போதாது என்று, கடந்த வாரம் கோவையில் பள்ளியில் படிக்கும் சிறுவன் ஒருவன் 4 போலீசாரால் தாக்கப்பட்ட சம்பவத்தில், கோவை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், சென்னை அண்ணா நகரில் மாத்திரை வாங்கச் சென்ற இளைஞரை, போலீசார் சிலர் சேர்ந்து தாக்கி விட்டு, அவரை தரதரவென இழுத்துச் சென்ற விவகாரமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞர் ஊரடங்கை மீறியதற்காக நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், அவரை தாக்கி காவல் நிலையம் அழைத்துச் செல்வது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அத்துடன், திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் முதியவர் ஒருவர் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த காவலரின் வாகனம் ஒன்று முதியவரின் சைக்கிளில் இடித்து சேதமாக்கி, அந்த முதியவரை போலீசார் தாக்குகின்றனர். இந்த காட்சிகளும் இணையத்தில் பரப்பப்பட்டு, போலீசாருக்கு பெருத்த அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. 

இதனால், அத்து மீறல்களில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்படி போலீசார் மனிதம் மறந்து இருக்கக் கூடிய இந்த பதற்றமான சூழ்நிலையில், தமிழக போலீசாருக்கு மீண்டும் ஒரு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாகச் சென்னையிலேயே மற்றொரு சம்பவம் நடந்துள்ளது, அனைத்து தரப்பினரையும் கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

சென்யைில் தீவிரமாகப் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறி வாகனத்தில் வருபவர்களின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்வதோடு, அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்து வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை மணலி பஜார் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், உடல் நிலை சரியில்லாத தனது தயாரை, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்க அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது, அந்த இளைஞரை வழிமறித்த போலீசார், காரணம் கேட்டுள்ளார். அந்த இளைஞரும் “என் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை. அவரை மருத்துவமனையில் காண்பிப்பதற்காக அழைத்துச் செல்கிறேன்” என்று கூறி உள்ளார். ஆனால், அந்த இளைஞரிடம் உரிய அடையாள அட்டை இல்லை என்ற ஒரு காரணத்தினால், அந்த இளைஞரின் வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ளார். மேலும், அந்த இரு சக்கர வாகனம் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. அந்த இளைஞர், போலீசாரிடம் எவ்வளவோ கெஞ்சியும், மன்றாடியும் அந்த போலீசார் மனம் இறங்கி வரவில்லை.

அடுத்த சற்று நேரத்தில், அந்த இளைஞனின் தாயார் அங்கியே மயங்கி சரிந்தார். அப்போதும், அந்த போலீசார் வாகனத்தைத் தராமல், 108 ஆம்புலன்க்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தும் அங்கு ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால், அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், அந்த போக்குவரத்து போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த போலீஸ்காரர் அந்த மக்களிடம் சட்டம் பேசி உள்ளார். 

அதற்கு, அந்த பொதுமக்களும், “உயிரை விட சட்டம் பெரிசு இல்லை” என்று கூறி, அவரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன், அந்த போலீசாரின் பதில் மற்றும் நடவடிக்கைகளை தங்களது சொல்போன் மூலம் படம் எடுத்துள்ளனர்.

மேலும், அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும், மயங்கிய பெண்மணி மீது இறக்கம் காட்டுங்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளனர். இதனால், அந்த பகுதியில் கூட்டம் கூடி உள்ளது. ஆனால், கொஞ்சம் கூட அவர் மனம் இறங்கி வர மறுத்த நிலையில், “இங்கே யாரும் கூட்டம் கூட வேண்டாம். எல்லோரும் கலைந்து போங்கள்” என்று கூறி விரட்டி உள்ளார்.

அப்போது, ஒரு இளைஞர், “இந்த இடத்தில் உங்கள் அம்மாவோ, உங்கள் வீட்டில் உள்ளவர்களோ இப்படி மயங்கிக் கிடந்தால், நீங்கள் இப்படிதான் சட்டம் பேசிக்கொண்டு இருப்பீர்களா?” என்று கேள்வி கேட்டார். அதற்கு, அந்த போலீசார் எந்த பதிலும் சொல்லவில்லை.

இதனையடுத்து, பலரும் தன்னை செல்போனில் படம் எடுக்கிறார்கள் என்பதை அந்த போலீசார்கள் உணர்ந்துள்ளார். பின்னர், “ஒரு வேளை இந்த பெண்மணிக்கு எதாவது நேர்ந்தால், மொத்த பலியும் நம் மீது தான் வரும் என்ற பயத்தில்”, அந்த பெண் மணி மயங்கி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, எடுத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞரின் இருசக்கர வாகனத்தை மீண்டும் எடுத்துவரச் சொல்லி இருக்கிறார். அதன்படி, எங்கிருந்தோ அந்த இருசக்கர வானம் மீண்டும் எடுத்துவரப்பட்டது.

ஒரு மணி நேரம் ஆகியும் 108 ஆம்புலன்ஸ் வராத நிலையில், மீண்டும் அந்த இளைஞன் தன்னுடைய இருசக்கர வாகனத்திலேயே தனது தாயாரை அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், தற்போது சில காவலர்கள் மனிதம் மறந்து, தற்போது உள்ள சூழலையும் புரிந்துகொள்ளாமல், பொதுமக்களிடம் நண்பனாகவும் நடந்துகொள்ளாமல். அவர்களது செயல்பாடுகள், கல் நெஞ்சத் தனமாக மாறி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

“ஓவர் ஓவர்” போலீஸ்கார் நீங்கள் பண்றது எல்லாம் இப்ப ஓவரோ ஓவர் சார்!