சாத்தான்குளம் லாக்கப் டெத் எதிரொலியாக, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு குழுவுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 

தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும் - மகனும் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலும் வெளியானது. குறிப்பாக, இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதாவதாகவும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்கள் போலீசார் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விடிய விடிய துளிகூட இறக்கம் இல்லாமல், பிரண்ட்ஸ் ஆப் போலீசார் கடுமையாக தாக்கியதாகவும் செய்திகள் வெளியானது. 

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால், கடும் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி வியாபாரிகள், ஊர் மக்கள் அனைவரும், சாத்தான் குளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து, இந்த வழக்கில் சம்மந்தபட்ட சாத்தான்குளம் எஸ்.ஐ. ரகு கணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ்  சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை ஆகியோரை சிபிசிஐடி போலீசார் அடுத்தடுத்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவர்கள் 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

எனினும், சாத்தான்குளம் லாக்கப் டெத் சம்பவத்தில், பிரண்ட்ஸ் ஆப் போலீசார் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியான நிலையில், அவர்களுக்கு எதிராக தமிழக முழுவதும் பல கண்டன குரல்களும் எழுந்தன. மேலும், சில இடங்களில், பிரண்ட்ஸ் ஆப் போலீசார் கடந்த காலங்களில் செய்த அட்டகாசங்கள் குறித்தும், தற்போது தொடர்ந்து புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, “சாத்தான்குளம் லாக்கப் டெத் சம்பவத்தில் தொடர்புடைய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை, தமிழக அரசு கலைக்க வேண்டும் என்று, எம்.எல்.ஏ. மு.தமிமுன் அன்சாரி, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அத்துடன், “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது? யார், யாரை கொண்டு உருவாக்கப்படுகிறது? அதன் நோக்கம் என்ன? அதன் எல்லைகள் என்ன? என்பது பற்றிய விபரங்கள் நாட்டு மக்களுக்கு தெரியவில்லை” என்றும் எம்.எல்.ஏ. மு.தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பினார்.

மேலும், “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவில் உள்ளவர்கள் லத்தியை தொடவே சட்டத்தில் இடமில்லாத போது, அந்த லத்தியால் தாக்குதலில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம்?” என்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பரந்தாமன் கேள்வி எழுப்பினார். இதுபோன்று பல்வேறு கண்டன குரல்கள் பதிவானது.

அத்துடன், கடந்த சில நாட்களுக்க முன்பு செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல ஐஜி முருகன், “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு காவல்துறை விசாரணையில் தலையிட உரிமை இல்லை” என்றும், காவல்துறை விசாரணையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தலையிட முடியாது என்றும், அவர்கள் தவறு செய்தால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” உறுதிபடத் தெரிவித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து, சாத்தான்குளம் லாக்கப் டெத் சம்பவத்தின் போது, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் 5 பேர் பணியில் இருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், அவர்களை அழைத்து விசாரிக்க நினைத்த தென்மண்டல ஐஜி முருகன், சம்பவத்தின் போது பணியில் இருந்ததாக கூறப்படும் 5 பிரண்ட்ஸ் ஆப் போலீசாரையும் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால், அந்த 5 பேரும் தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, தலைமறைவாகி விட்டனர். இதனால், அந்த 5 பேரும் விசாரணைக்கு ஆஜராகத நிலையில், அவர்களை தேடிம் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு பிரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீசார், காவல் துறையுடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபடுவது, குற்றவாளிகளைக் கைது செய்வது போன்ற பணிகளில் இணைந்து செயல்பட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல் நிலையத்திற்குள் அவர்களை அனுமதிக்க கூடாது என்றும், அந்த உத்தரவில் கூறப்பட்டள்ளது. இதே போல், விழுப்புரம் மாவட்டத்திலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கு தற்காலிகமாக பல அதிரடியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதே போல் மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு அதிரடியாக பல்வேறு கட்டுப்பாடுகள விதித்து நெல்லை சரக டிஐஜி பிரவீண் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், “வணிகர்கள் மற்றும் மக்கள் இடையே இணைந்து போலீசாருக்கு உதவியாக தான், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டார். “போலீசார் மேற்கொள்ளும் அன்றாட பணிகளான கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் அவர்களை ஈடுபடுத்தவில்லை” என்றும் அவர் விளக்கம் கொடுத்தார்.  

அத்துடன், “சட்டத்தை மீறி பிரண்ட்ஸ் ஆப் போலீசார் செயல்பட்டால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்குத் தடை இல்லை” என்றும் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.

இதனிடையே, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் அவர்களுக்கு தடை விதிக்க முடயாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.