சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 

படத்திற்கு U சான்றிதழ் வழங்கிய சென்சார் குழுமம், படக்குழுவினரை சமீபத்தில் பாராட்டியது. சமீபத்தில் பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ், படத்தில் இடம்பெற்ற பாடல் குறித்து கூறியிருந்தார். அதில் இளைஞர்கள் விரும்பும் வகையில் இருப்பதாகவும், மோட்டிவேஷனல் பாடலாக இருக்கும் என்ற ருசிகர செய்தியை தெரிவித்தார். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படம் இதுவாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமம் 55 கோடி ரூபாய்க்கும், கேரளா மற்றும் ஆந்திராவில் இன்னும் விற்பனை துவங்கவில்லை என்றும் செய்திகள் வெளியானது. இதுகுறித்து சூர்யா தரப்பினரிடம் கேட்கையில் அதுபோன்ற செய்திகள் ஏதும் இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தினர். நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வருவதால், படத்தின் ட்ரைலரை வருமா என்ற ஆவலில் காத்திருக்கின்றனர் சூர்யா ரசிகர்கள். நேற்று சுதா கொங்கராவின் பிறந்தநாளை முன்னிட்டு, வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டது 2D நிறுவனம். 

சூரரைப் போற்று அப்டேட்டுகள் ஒருபுறமிருக்க, பல்வேறு நலத்திட்டங்கள் செய்து அசத்தி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள். கொரோனா நேரத்தில் தனது ரசிகர்கள் செய்த உதவிகள் குறித்து சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இந்த கடினமான சூழலில் தொடர்ந்து உதவிகள் செய்வது சாதாரண விஷயமல்ல, இதை யாருக்கும் ப்ரூவ் பண்ண செய்யல, ஒரு மன நிறைவுக்காகதான் செய்யுறோம், தொடர்ந்து உதவிகள் பண்ணுங்க, உங்களை வருத்திக்காம செய்ங்க, பாதுகாப்பா இருங்க, யாருக்கு ரொம்பவே கஷ்டம் இருக்கோ, அவங்களுக்கு இந்த உதவிகள் போய் சேர்கிறதா என சரி பார்த்து கொள்ளுங்கள், முடிந்தவரை ப்ளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிருங்கள், நிறைய தம்பிகள் இப்படி உதவி செய்து வருகிறார்கள். தொடர்ந்து இப்படி செய்வது பெரிய விஷயம். வாழ்த்துக்கள் என்று ஆடியோவில் குறிப்பிட்டிருந்தார். 

லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் வாடிவாசல் போன்ற படங்களின் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.