டெல்லியை சேர்ந்த 106 வயது நபரொருவர், தற்போது கோவிட் - 19 கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டிருக்கிறார். 1918 - ம் ஸ்பானிஷ் ஃப்ளூவின் போது இவருக்கு 4 வயதென இருந்திருக்கிறது. அப்போது அவருக்கும் ஃப்ளூ தொற்று ஏற்பட்டு, நலமாக மீண்டிருந்திருப்பதாக அவர் சொல்லியுள்ளார். 

இதுவரை ஏற்பட்ட கொள்ளை நோய்களிலேயே, ஸ்பானிஷ் ஃப்ளூதான் மிக மோசமான நோயாக மருத்துவ உலகில் பார்க்கப்படுகிறது. ஏனெனில், அதனால் இறந்தவர்கள் ஏறத்தாழ 40 மில்லியன் மக்கள்!  உலகளவில் மூன்றில் ஒரு பங்கினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது ஆய்வு சொல்லும் முடிவுகள். ஸ்பானிஷ் ஃப்ளூ, ஹெச்.1.என்.1 என்ற வைரஸிலிருந்து பரவிய நோய்வகை. இப்போதுவரை, இது எங்கிருந்து / எதிலிருந்து பரவிய நோய் என்பதேவும் கண்டறியப்படவில்லை. அப்படிப்பட்ட ஒரு கொடிய நோயிலிருந்து மீண்டவர், இப்போது இரண்டாவது முறையும், ஒரு பேண்டெமிக் நோயிலிருந்து இவர் மீண்டது, நோய் குறித்த அச்சத்திலிருக்கும் பலருக்கும் ஆறுதல் தரும் விஷயமாக இருக்கிறது.

இப்போது, இவருடைய 70 வயது மகனுக்கும், கோவிட் - 19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அவரும் கடந்த சில தினங்களாக சிகிச்சையில் இருந்தார். மேலும் 65 வயது மருமகள், 100 வயது மனைவி என்று எல்லோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இவரின் மகன், நோயிலிருந்து மீண்டுவிட்டார் என கூறியிருள்ளனர் மருத்துவர்கள். இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மகனைவிட தந்தை வேகமாக மீண்டுவிட்டார் எனக் கூறியிருக்கிறார்கள் அவர்கள். 

டெல்லியின் முதல் கொரோனா நோயாளியான இவருக்கு சிகிச்சை அளித்த டெல்லியின் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவர்கள், ``இவர் நிஜமாகவே ஸ்பானிஷ் ஃப்ளூவிலிருந்து மீண்டாரா என்பது எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் டெல்லியில் மிகக்குறைவான மருத்துவமனைகள்தான் இருந்தன. இருப்பினும், இப்போது இவர் இவ்வளவு தைரியமாக நோயை எதிர்த்து நின்று போராடி மீண்டிருப்பதை பார்க்கும்போது, நிச்சயம் அப்போதும் அவர் இதே தைரியத்துடனே இருந்திருப்பார். இவரின் தைரியத்தை பார்க்கும்போது, எங்களுக்கே ஆச்சரியமாக உள்ளது" என்றுள்ளனர்.

இந்த முதியவர் மட்டுமன்றி, இவரின் குடும்பத்தில் தொற்று உறுதிசெய்யப்பட்ட பலரும்கூட இப்போது மீண்டுவிட்டனர் என கூறியிருக்கிறார்கள் மருத்துவர்கள். மற்றவர்களும் வேகவேகமாக நோயிலிருந்து மீள்வதாக கூறியுள்ளார்கள் அவர்கள். இதைக்கண்ட நெட்டிசன் பலரும், `இந்தக் குடும்பத்தை போலவே அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தால், அனைவருமே நோயிலிருந்து மீளலாம்' என நெகிழ்ந்து வருகிறார்கள். 

இன்றைய சூழ்நிலையில் உலகளவில் பல லட்சம் பேர், வேலைவாய்ப்பை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். இதில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், அதிக நோயாளிகளை கொண்ட நாடு என்ற அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில், இதுவரை 6.99 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4.25 லட்சம் பேர் மீண்டு வீடுதிரும்பிவிட்டனர். இதை பார்க்கும்போது, இங்கு மீளும் விகிதம் அதிகம் என்பதை தெரிந்துக்கொள்ள முடிகிறது. எனவே இந்தியர்கள் கொரோனாவை கண்டு அஞ்ச வேண்டாம் என்கிறார்கள் சுகாதாரத்துறையினர்.

கொரோனாவிலிருந்து மீள, உடல் வலிமையை விடவும் மனவலிமைதான் முக்கியம் என்பதற்கு, வாழும் ஆதாராமாக மாறியிருக்கிறார் இந்த முதியவர்!

- ஜெ.நிவேதா.