சின்ன கலைவாணராக தமிழ் திரையுலகில் அசத்துபவர் நடிகர் விவேக். 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான விவேக், சிறந்த நடிகன் என்பதை கடந்து சீரான சமூக பணிகள் செய்து வரும் மனிதர். சமீபத்தில் மீம் கிரியட்டர்ஸ் குறித்த பதிவுடன் வீடியோ வெளியிட்டிருந்தார். இவர் தற்போது கொரோனா குறித்தும், இந்த நேரத்தில் மக்கள் மாஸ்க் அணியும் விதம் பற்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

தமிழகத்தில் கொரோனா தொற்றுள்ள 50 சதவீதத்துக்கும் மேலான மக்கள் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள் என்பது நம்பிக்கை அளிக்கிறது. ஆனால், கரோனா தொற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் போதிய முன்னுரிமை அளிக்கவில்லையோ என்பது அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா பற்றிய அச்சம் தேவையில்லை. அதே வேளையில் அலட்சியம் கூடாது.

நிறையப் பேர் மாஸ்க் என்ற பெயரில் ஏதோ ஒன்றைப் போட்டிருப்பதைப் பார்க்கிறேன். மூக்கையும், வாயையும் மூடுமாறு பலர் மாஸ்க் அணிவதில்லை. பல பேர் ஜாலியாக மாஸ்க்கை கழுத்தில் தொங்கவிட்டுள்ளனர். சில பேர் மாஸ்க்கை ஒற்றைக் காதில் ஸ்டைலாகத் தொங்கவிட்டுள்ளனர். இப்படியா மாஸ்க் போடுவது?

இந்த கொரோனா ஊரடங்கில் நாம் சாப்பிட்ட பிறகு, மற்றவர்கள் சாப்பிட்ட தட்டுடன் சேர்த்துக் கழுவுவது வீட்டுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்று தெரிந்துகொண்டேன். கார், பைக், சைக்கிள் உள்ளிட்டவற்றை நாமே கழுவுவது எவ்வளவு கடினம் என்பதைத் தெரிந்துகொண்டேன். சினிமா சாராத நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு தொடர்ச்சியாகப் பேசி வருகிறேன்.கொரோனாவை விட மோசமானது என்னவென்றால் நமக்கு கொரோனா வந்துவிடுமோ என்ற பயம்தான். நமக்கு ஒன்றும் வராது. நாம் நன்றாக இருக்கிறோம் என்று நினைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் விவேக். 

உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்க பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 மற்றும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார் விவேக். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன், இந்த படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.