திருநங்கைகளைக் குறிவைத்து காதல் நாடகமாடி பணம் பறித்த இளைஞரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 

தமிழகத்தில் பெண்களை ஆபாசப் படம் எடுத்து, அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய பொள்ளாச்சி சம்பவத்தை நாம் மறந்து இயல்பாக கடந்து சென்று விட்டோம். தற்போது, நாகர்கோவில் காசி அதே பாணியில், காதலிப்பதாகப் பெண்களிடம் நெருங்கிப் பழகி, அவர்களை ஆபாசமா படம் எடுத்து வைத்துக்கொண்டு, அவர்களிடம் பணம் பறிக்கும் வேலை செய்தார். அந்த வழக்கு சுடச் சுட தற்போது நடந்துகொண்டு இருக்கிறது. தற்போது, இதே பாணியில் தான், திருநங்கைகளைக் குறிவைத்து காதல் நாடகமாடி பணம் பறித்த இளைஞர் ஒருவரை தான் போலீசார் தற்போது  கைது செய்து உள்ளனர். 

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த திருநங்கை பிரியங்கா, புழல் பகுதியைச் சேர்ந்த முகமது உசேன் என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் முதல் திருநங்கை பிரியங்கா - முகமது உசேன், இருவரும் காதலிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அத்துடன், “நான் கப்பலில் வேலை செய்கிறேன்” என்றும் முகமது உசேன் கூறியதாகத் தெரிகிறது.

அப்போது, “திருமணம் செய்து கொண்டு மனைவியைப் போல் பார்த்துக்கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி” திருநங்கை பிரியங்காவுடன், முகமது உசேன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். 

பிரியங்கா - முகமது உசேன், இருவரும் காதலிக்க ஆரம்பித்து நெருங்கிப் பழகி வந்த நிலையில், பிரியங்காவின் வங்கி டெபிட் கார்ட், செல்போன், அவர் தொடர்பான பொருட்கள் என எல்லாவற்றையும் முகமது உசேன், பயன்படுத்திக்கொண்டதாகத் தெரிகிறது.

குறிப்பாக, பிரியங்காவின் வங்கிக் கணக்கிலிருந்து 5000, 10,000 ரூபாய் என கடந்த 10 மாதத்தில் சுமார் 2.30 லட்சம் ரூபாய்க்கு மேல் முகமது உசேன், பணத்தைப் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அடிக்கடி பணம் வாங்குவது குறித்து பிரியங்கா, உசேனிடம் கேட்டதாகத் தெரிகிறது. அப்போது, இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, பிரியங்கா உடனான தொடர்பை முற்றிலுமாக முகமது உசேன் தவிர்த்து வந்துள்ளார். அத்துடன், தன்னுடைய செல்போன் நம்பரையும் மாற்றி விட்டு, முகமது உசேன் தலைமறைவாகி உள்ளார்.

ஆனால், திருநங்கை பிரியங்கா தொடர்ந்து முகமது உசேனை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். அவருக்குத் தெரிந்த நண்பர்கள் மற்றும் இருவருக்கம் பொதுவான நண்பர்கள் மூலமாக அவர் தேடிப் பார்த்துள்ளார். அங்குத் தேடியும் முகமது உசேன் இருக்கும் இடம் அவருக்குத் தெரியவே இல்லை. இதனால், தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை அவர் நன்கு உணர்ந்து உள்ளார். 

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரியங்கா, கடந்த சில தினங்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். பின்னர், தான் ஏமாற்றப்பட்டதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் பிரியங்கா புகார் அளித்து உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், தூத்துக்குடி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் திருநங்கை யுவஸ்ரீ என்கிற முத்துலெட்சுமி, கடந்த வாரம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, திருநங்கை யுவஸ்ரீ என்கிற முத்துலெட்சுமி தற்கொலை செய்துகொண்டது தொடர்பான புகைப்படங்கள் திருநங்கைகளின் வாட்ஸ்ஆப் குரூப்பில் பகிரப்பட்டது. இதில், பிரியங்காவல் ஏமாற்றப் பட்ட முகமது உசேன் புகைப்படம் இருந்துள்ளது. இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த பிரியங்கா, முகமது உசேன் தூத்துக்குடியில் யுவஸ்ரீயுடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, இது குறித்த தகவல் சென்னை அமைந்தகரை காவல் நிலையத்திற்கு தரப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் குறித்து ஒன்று திரண்ட திருநங்கைகள், “பிரியங்கா விசயத்தில் நாங்கள் புகார் கொடுக்கும் போதே முகமது உசேனை கைது செய்திருந்தால், தூத்துக்குடியில் திருநங்கை யுவஸ்ரீ தற்கொலை செய்துகொள்ள நேர்ந்திருக்காது” என்று கூறி, அமைந்தகரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பேச்சு வார்த்தை நடத்திய போலீசார், சம்மந்தப்பட்ட குற்றவாளியைக் கைது செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து, அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை அமைந்தகரை போலீசார், தூத்துக்குடி விரைந்து சென்று, முகமது உசேனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “யுவஸ்ரீயை கடந்த 6 மாதத்திற்கு முன்பாகவே முகமது உசேன், திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், யுவஸ்ரீ 

வாங்கிய வீட்டுக் கடனை திரும்பச் செலுத்துவது தொடர்பாக இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது. இதில், ஒரு கட்டத்திற்கு மேல் பொருமையை இழந்த யுவஸ்ரீ, தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. 

மேலும், திருநங்கை யுவஸ்ரீ, தற்கொலை செய்யும் முன்பு கொடுத்த மரண வாக்கு மூலத்தில், “முகமது உசேன் என்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக” கூறி இருந்திருக்கிறார். அது குறித்தும், தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. 

அதேபோல், முகமது உசேன் கப்பலில் வேலை செய்யவில்லை என்றும், அவர் சென்னை ரிச்சி தெருவில் உள்ள செல்போன் கடை ஒன்றில் வேலைப் பார்த்து வந்ததும் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.