2017-ம் ஆண்டு லை என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். கெளதம் மேனன் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்திருந்தாலும், பேட்ட மற்றும் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்து பல ரசிகர்களை ஈர்த்தார். இந்த லாக்டவுனில் ஒன்றாக என்டர்டெயின்மென்ட் தயாரித்த ஒரு ஒரு சான்ஸ் குடு பாடலில் மேகா ஆகாஷ் நடித்திருந்தார். கெளதம் மேனன் இயக்கத்தில் ஷாந்தனு பாக்கியராஜ் மற்றும் கலையரசன் நடித்த இந்த பாடலை கார்த்திக் பாட பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருந்தார். 

இந்தியில் சூரஜ் பஞ்சோலி ஜோடியாக, சேட்டிலைட் சங்கர் என்ற ஹிந்தி படத்தில் நடித்த மேகா ஆகாஷ், இப்போது மீண்டும் ராதே எனும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் திஷா பதானி, ரன்தீப் ஹுடா, ஜாக்கி ஷெராப், பரத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்து கொண்டிருக்கும்போதுதான், லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இப்படம் பற்றி பிரபல நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார் மேகா ஆகாஷ். அப்போது பேசியவர், இந்தப் படத்தில் நான் சல்மான் கான் ஜோடியாக நடிக்கவில்லை. ஆனால், முக்கிய வேடத்தில் நடிக்கிறேன் என்றார். சல்மான் கான் மிகச் சிறந்த மனிதர். சின்ன நிகழ்வையும் ஞாபகம் வைத்துக்கொள்கிறார். 

ஒரு முறை அவரது Being Human அமைப்பைப் பற்றி அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். மறுநாள் பீயிங் ஹியூமன் டி சர்ட்கள் சிலவற்றை எனக்குக் கொடுத்தார். என்னால் நம்பவே முடியவில்லை. அவர் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இந்தப்படம் எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார் மேகா. 

சந்திரா ஆர்ட்ஸ் இசக்கி துரை தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்துள்ளார் மேகா ஆகாஷ். கனிகா, மோகன் ராஜா, ரித்விகா, விவேக், சின்னி ஜெயந்த் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது.