கணவனை இழந்த மருமகளை மாமனாரே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் 21 வயதான ஆர்த்தி சிங் என்ற இளம் பெண், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா ராஜ்புத் சிங் என்பவரின் மகன் கவுதம் சி்ங்கை, திருமணம் செய்துள்ளார். 

இவர்களது திருமண வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்பாராமல் நடைபெற்ற விபத்து ஒன்றில், கவுதம் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் உயிரிழந்த நிலையில், விதவையான இளம் பெண் ஆர்த்தி சிங், தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். ஒரு ஆண் துணை இல்லாமல் இளம் பெண்கள் பெரும்பாலும் படும் வேதனைகளை அவர் பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, தனது மருமகளை மாமனார் கிருஷ்ணா ராஜ்புத் சிங், மிகவும் கனிவோடும், அன்போடும் பார்த்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆண் துணை இல்லாமல் சிறு வயதிலேயே கணவனை பறிகொடுத்த அந்த இளம் பெண்ணை, மாமனாரையே திருமணம் செய்து கொள்ள அந்த பகுதியினர் சிலர், அந்த இளம் பெண்ணுக்கும், மாமனார் கிருஷ்ணா ராஜ்புத் சிங்கிற்கும் ஆலோசனைகள் வழங்கி உள்ளனர். 

இதனையடுத்து, இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள பெரிய மனிதர்கள் சிலரிடம் கிருஷ்ணா ராஜ்புத் சிங், ஆலோசனை நடத்தி உள்ளார். அதற்குப் பலரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அத்துடன், தனது மாமனார் மிகவும் அன்பாகவும், பொறுப்பாகவும் மருமகளை நன்றாகக் கவனித்துக்கொண்டு வந்ததால், மாமனாரையே திருமணம் செய்து கொள்ள, மருமகள் பூரண சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய அரசின் கொரோனா விதிமுறைக்கு உட்பட்டு, ராஜ்பூத் க்ஷத்ரிய மகா சபாவினர் திருமணத்திற்கான முழு ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளனர். 

அதன்படி, ராஜ்பூத் க்ஷத்ரிய மகா சபாவின் குழு அமைப்பின் முன்னெடுப்பில், தன் சொந்த மருமகளை, அவரது மாமனார் கிருஷ்ணா ராஜ்புத் சிங்கே, முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு, அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, சத்தீஸ்கரில் கணவனை இழந்து 2 வருடங்களாகத் தனிமையில் வாடிய மருமகளை, சொந்த மாமனாரே திருமணம் செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதேபோல், தமிழகத்தில் ஏற்கனவே திருமணம் ஆன ஒருவர், 17 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்ய ஏமாற்றி அழைத்துச் சென்ற விவகாரத்தில், போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பத்தரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 24 வயதான புவனேஸ்வரன், அந்த பகுதியில் கொத்தனாரான வேலை செய்து வருகிறார். புவனேஸ்வரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியும் - குழந்தையும் இருக்கின்றனர்.

இந்த நிலையில், கோயம்புத்தூரில் கட்டிட வேலைக்குச் சென்ற இடத்தில், அவர் திடீரென்று கீழே விழுந்து விபத்தில் சிக்கி உள்ளார். இதனால், புவனேஸ்வரனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பெறும் போது, அதே  மருத்துவமனையில் பணிபுரிந்த ஆலங்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, அந்த சிறுமி சொந்த ஊர் திரும்பி உள்ளார். அப்போது, அந்த சிறுமியைத் தேடி வந்த புவனேஸ்வரன், சிறுமியிடம் பல ஆசை வார்த்தைகள் கூறி, அவரை அழைத்துச் சென்றுள்ளார். 

இந்த தகவல், சிறுமியின் பெற்றோருக்கு எப்படியோ தெரிய வந்த நிலையில், அவர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை அந்த பகுதி முழுவதும் வலை வீசி தேடி உள்ளனர். அப்போது, அவர்கள் இருவரும் கோவை செல்ல தயாராக இருந்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்துள்ளனர். அப்போது, அந்த இளைஞரின் ஆசை வார்த்தைகளில் மயங்கி சிறுமி உடன் சென்றது தெரிய வந்தது.

அதன் பிறகு, சிறுமிக்கு அறிவுரை கூறி, அவரை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். அத்துடன், சிறுமியைத் தவறான எண்ணத்துடன் கடத்தியதாக புவனேஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.