இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் நடித்துள்ள திரைப்படம் மாமனிதன். விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். விஜய் சேதுபதி ஜோடியாகவும், படத்தின் நாயகியாகவும் காயத்ரி நடித்துள்ளார். 

குரு சோமசுந்தரம், பேபி மானஸ்வி, அனிகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள். தென்காசி, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற மாமனிதன் படப்பிடிப்பு, 2019-ம் ஆண்டு பிப்ரவரியுடன் முடிவடைந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் படம் வெளியாகததால் மிகுந்த கவலையில் இருந்தனர் விஜய் சேதுபதி ரசிகர்கள். இந்நிலையில் படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முதல் முறையாக ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. 

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் பற்றிய ருசிகர தகவலை பதிவிட்டுள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி. முதல் பாடலை இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளதாகவும், விரைவில் வெளிவரவிருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள். 

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான லாபம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய இப்படப்பிடிப்பு கடந்த ஆண்டின் இறுதியில் நடந்து முடிந்தது. லாபம் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்து அசத்தினார் சேது. குறிப்பாக பவானி ரோல் அனைவரின் ஃபேவரைட்டாக உள்ளது. இது தவிர்த்து மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது. 

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதில் நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.