பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படம், படப்பிடிப்புத் தளத்தில் விபத்து உள்ளிட்ட பல காரணங்களால் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. விரைவில் தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கரின் அடுத்த படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது.

இதில் நாயகனாக தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஷங்கர் - ராம் சரண் கூட்டணி படத்தைத் தயாரிக்கவுள்ளது குறித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனரான தில் ராஜு கூறுகையில் , இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குனரான ஷங்கருடன், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. 

தேசிய அளவில் இந்தியாவின் அத்தனை விதமான ரசிகர்களுக்குமான ஒரு பொழுதுபோக்குப் படத்தை நாங்கள் கொண்டுவர உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இது ராம் சரணின் 15-வது படமாகவும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 50-வது மைல்கல் திரைப்படமாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது படப்பிடிப்பு தொடங்கும், ராம் சரணுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. 

ராம் சரண் கைவசம் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உள்ளது. பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் இரத்தம் ரணம் ரெளத்திரம். இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் தயாராகி வருகிறது. 

அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதம் 13-ந் தேதி தசரா பண்டிகையையொட்டி இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.