“நீ திருமணம் செய்து கொள்ள கூடாது.. என்னுடனே இருந்து விடு” என்று, திருமணம் ஆகாத இளைஞரை கள்ளக் காதலி தொடர்ந்து வற்புறுத்தி வந்தால், ஆத்திரமடைந்த கள்ளக் காதலன், காதலியை கொன்று எரித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், அவரது மனைவி 38 வயதான வெண்ணிலா தம்பதியினர் வசித்து 
வந்தனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். 

இந்த தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, கணவன் முருகேசன் உயிரிழந்து விட்டார். இதனால், தனது இரு பிள்ளைகளுடன் வெண்ணிலா மிகவும் சிரமப்பட்டே பிள்ளைகளை வளர்த்து வந்தார். 

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சோழம்பட்டு கிராமத்தில் வசிக்கும் முனியப்பிள்ளை மகன் 32 வயதான ரஜினிகாந்த் உடன், வெண்ணிலாவிற்குக் கள்ளக் காதல் ஏற்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இப்படியாக இவர்களது உல்லாச வாழ்க்கை சென்றுகொண்டிருந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக காதலி வெண்ணிலா, தனக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து 4 லட்சம் ரூபாய் பணத்தை ரஜினிகாந்த்துக்கு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ரஜினிகாந்த்தின் பெற்றோர், அவருக்குத் திருமணம் செய்து வைக்கப் பெண் பார்த்து வந்தனர். அதன்படி, திருமணத்திற்குப் பெண் கிடைத்து விட்ட நிலையில், இந்த தகவலைக் காதலி வெண்ணிலாவிடம், ரஜினிகாந்த் வந்து கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு மகிழ்ச்சியடையாத வெண்ணிலா, சோகத்தோடு காணப்பட்ட நிலையில், “நீ திருமணம் செய்து கொள்ள கூடாது. என்னுடனே கடைசி வரைக்கும் இருந்து விடு” என்று, காதலன் ரஜினிகாந்த்திடத்தில் கூறியிருக்கிறார். ஆனால், இது ரஜினிகாந்த்திற்குப் பிடிக்கவில்லை.

இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்ததாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில், தனக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து கொடுத்த 4 லட்சம் ரூபாய் பணத்தைத் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும், அல்லது நீ திருமணம் செய்துகொள்ளாமல் என்னுடனே இருக்க வேண்டும் என்றும், வெண்ணிலா காதலன் ரஜினிகாந்த்தை வற்புறுத்தி உள்ளார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த காதலன் ரஜினிகாந்த், வெண்ணிலாவைக் கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார். 

அதன் படி, அங்குள்ள விஐபி நகர் பகுதிக்கு அழைத்துச் சென்ற காதலன் ரஜினிகாந்த், அங்குள்ள முட்புதரில் வைத்து மது ஊற்றி காதலிக்கு கொடுத்து உள்ளார். அதனைக் குடித்த வெண்ணிலாவும், சிறிது நேரத்தில் மயங்கி உள்ளார்.

இதனையடுத்து, இரும்பு ராடால் வெண்ணிலாவின் தலையில் அடித்து, அவரை கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளார். 

அதன் பிறகு, நகைக்கா கொலை செய்யப்பட்டது போல், வெண்ணிலாவின் செல்போன், கொலுசுகள், தங்கச் செயின்களை ரஜினிகாந்த் எடுத்துக்கொண்டு, அந்த உடலை அங்குள்ள முட்புதரில் வீசி அவரை உடலை எரித்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த வழியாகச் சென்றவர்கள் பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் இருப்பது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலை செய்யப்பட்டது வெண்ணிலா தான் என்பதை முதலில் கண்டுபிடித்தனர். 

இதனையடுத்து, அவர் பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணிற்குக் கடைசியாக வந்த போன் நம்பரை வைத்து, விசாரணை நடத்தியதில் கள்ளக் காதலன் ரஜினிகாந்த் சிக்கி உள்ளார். இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில்தான், அவர் காதலி வெண்ணிலாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.