வானம் எட்டும் தூரம்தான் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் மான்யா ஓம்பிரகாஷ் சிங். யார் இந்த மான்யா ?


 VLCC FEMINA MISS INDIA அழகிப்போட்டி 2020-யின்  Runner Up கிரீடத்தை  கைப்பற்றி இந்தியா முழுவதும் பேசு பொருளாக இருப்பவர் தான் இந்த மான்யா. பல வெற்றியாளர்கள் பல துறைகளில் வெற்றிக் கனியை பறித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனாலும் ஏன் சில பேர் மட்டும் பேசு பொருளாக மாறுகிறார்கள். அது அவர்கள் கடந்து வந்த பாதையைப் பொறுத்தே அமைகிறது. நாம் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றை பார்த்திருப்போம், அதில் ஒரு பெண் வெண்ணிற ஆடை அணிந்து தன்னுடைய முதல் நாள் பணிக்கு ஒரு ஆட்டோவில் வந்து இறங்குவார், அப்போது அவருக்காக காத்திருந்த சக அதிகாரிகள் ஏன் ஆட்டோவில் வருகிறீர்கள் காரில் வந்திருக்கலாமே என்ற போது, அந்த ஆட்டோ ஓட்டுபவர்தான் என் தந்தை என்பார். மான்யாவும் இது போன்ற ஒரு நிஜ வாழ்க்கைக் கதைக்கு சொந்தக்காரர்தான். 

கடவுள் தன் அவதாரங்களை அவதரிப்பதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட பூமியான உத்தரபிரதேச மாநிலத்தின் குஷிநகர்தான் மான்யாவும் அவதரித்த ஊர். அவரின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர். பொதுவாக, மனிதர்களிடம் எந்த கவலையும் இல்லாதப் பருவம் எது என்றுக் கேட்டால் , அது குழந்தைப் பருவம் என்றுதான் சொல்லுவார். ஆனால் மான்யாவிற்கு அந்த குழந்தைப் பருவம் கூட சுமையாகத்தான் அமைந்தது.

INSTAGRAM பக்கத்தில் அவர் தன்னுடய குடும்பப் படத்தை வெளியிட்டு அதற்கு கீழ் பதிவிட்டிருந்த அந்த பதிவுதான், அவர் தன் வாழ்க்கையில் ஒவ்வொரு கணத்திலும் எத்தனை ரணங்களை அனுபவித்திருக்கிறார் என்பதை உணர்த்தியது. அந்த பதிவு, தன் துயரத்தை குறிப்பிடுவதாக மட்டுமில்லாமல், தன்னை போல் பலரும் பல உயரத்தை அடைய வேண்டும் என்ற உத்வேகத்தை விதைப்பதாகவும் இருந்தது.

மான்யா, தன்னுடைய பல இரவுகளை உணவு மற்றும் தூக்கம் இல்லாமல் கழித்திருந்தார். பல மதியங்களில் மைல்  தூரம் நடந்திருக்கிறார். அவர் சிந்திய இரத்தம், வியர்வை, கண்ணீர் அனைத்தும் தன் கனவை நோக்கி பயணிக்க தன் மனதில் தைரிய வெள்ளத்தை பாய்ச்சியது. தான் ஒரு ஆட்டோ ஓட்டுநரின் மகளாக பிறந்ததால் தனக்கு ஒருபோதும் பள்ளிக்கு சென்று படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், தன் பதின்பருவத்திலேயே பணி செய்ய வேண்டியதாகவும் இருந்தது.

maniyaதன்னிடம் இருந்த அனைத்து உடைகளும் , யாரோ பயன்படுத்தியபிறகு தனக்கு கொடுத்ததுதான்.  மான்யா புத்தகத்திற்காக ஏங்கினார், ஆனால் தன் பக்கம் அதிர்ஷ்டம் வரவேயில்லை. மான்யா தனது படிப்பை முடிப்பதற்காக தன் தாய் நகைகளை அடமானம் வைக்க வேண்டியிருந்தது. தன்னுடைய 14 வயதில், வீட்டை விட்டு வெளியேறினார். பல வீடுகளில் பாத்திரம் துலக்கியும், கால் செண்டரில் இரவு நேரங்களில் கண் விழித்து வேலை பார்த்துதான் தன்னுடைய படிப்பை முடிக்க இயன்றது.

பணத்தை சேமிப்பதற்காக மைல்கள் நடந்திருக்கிறார் மான்யா. தன்னுடைய அப்பா, அம்மா, தம்பி ஆகியோருடன் VLCC FEMINA MISS INDIA 2020 மேடையில் ஜொலித்தார் மான்யா.

மேடையில் பேசிய மான்யா “ உங்களுக்கும், உங்களுடைய கனவுகளுக்கும் நீங்கள் நேர்த்தியாகவும், உண்மையாகவும் இருந்தால் நிச்சயாமாக இந்த உலகிற்கு அனைத்தும் சாத்தியம் என்பதை உணர்த்தலாம்” என்றார் . 

தடைக் கற்களை கூட படிகற்களாக மாற்றலாம் என்று உலகிற்கு சாதித்துக் காட்டியிருக்கிறார் மான்யா. விடிகின்ற வானத்தில் விரிந்த மான்யாவின் வெற்றி சிறகுகள் சிறகடிக்கட்டும், மடிகின்ற இரளில் மலர்ந்த மான்யாவின் மறுமலர்ச்சி பூக்கள் பூத்து குலுங்கட்டும் , வேதனைகள் வேகட்டும், சாதனைகள் சாத்தியமாகட்டும்..!

-அஜெய் வேலு