கரூரைச் சேர்ந்த செங்குட்டுவன் என்பவர் திருக்குறளினால் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளார். அதனால் அவர் வள்ளுவர் உணவகம், வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வள்ளுவர் பெட்ரோல் ஏஜென்சிஸ் என்று தனது நிறுவனங்களை வள்ளுவர் பெயரிலேயே நடத்தி வருகிறார்.


இந்நிலையில் ஜனவரி 15 முதல் ஏப்ரல் 31 வரை பள்ளி மாணவர்கள் மத்தியில், திருக்குறளை ஊக்குவிக்கும் விதமாக கரூர் - மதுரை பைபாஸ்  சாலையில் இருக்கும் அவரது வள்ளுவர் பெட்ரோல் பங்கில், 10 திருக்குறள் சொல்லும் குழந்தைகளுக்கு அவர்களது இருசக்கர வாகனத்திற்கு அரை லிட்டர் பெட்ரோலும்,  20 திருக்குறள் சொல்லும் குழந்தைகளின் வாகனத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்குகிறார்.


இதனையடுத்து பள்ளி மாணவ, மாணவியர்கள் திருக்குறளை சொல்லி, பெற்றோரின் வாகனத்தில் பெட்ரோல் போட்டுச் சென்று வருகின்றனர். செங்குட்டுவனின் இந்த முயற்சி பரவலாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


பள்ளி காலத்திலே குறளின் மீதான ஆர்வத்தை தூண்டவும், குழந்தைகள், குறளை நன்றாக கற்று உணர வேண்டும் என்பதற்காகவும் இத்தகைய முயற்சியை மேற்கொண்டதாக செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.  தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாய்யைக் கடந்து விற்கப்படும் சூழ்நிலையில் பெற்றோர்கள் மத்தியில் இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.