இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லையில் பதற்றத்தை தணிக்க ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளுக்கும் இடையே முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்தப் பேச்சுவார்த்தை துவங்க இருக்கும் நிலையில், சில தினங்களுக்கு முன் டெல்லியில் இதுதொடர்பான கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சுமார் 90 நிமிடங்கள் கூட்டம் நடத்தினர்

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாஸ்கோவில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எல்லையில் பதற்றத்தை தணிப்பது, ராணுவ மற்றும் ராஜாங்க ரீதியில் பேச்சுவாத்தை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று இந்தக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டம் நடத்துவதற்கு சீனாவும் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எப்போது இந்தக் கூட்டம் எங்கு நடைபெறும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் எல்லையில் படைகளை வாபஸ் பெறுவது பற்றி பேசப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது எல்லையில் இருநாட்டுப் படைகளும் எந்த சூழலையும் எதிர்கொள்ளும் நிலையில் தயாராக இருக்கின்றனர் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சீன ராணுவத்தால் இந்தியாவின் முக்கிய வி.ஐ.பி,க்கள் உளவுபார்க்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. அந்தக் குற்றச்சாட்டின்படி சீனாவின் கண்காணிப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இந்தியர்கள் 10,000 பேர் சிக்கியுள்ளதாக வெளியான தகவலையடுத்து, தற்போது உலகமெங்கும் சுமார் 24 லட்சம் பேர் இந்த வலையில் சிக்கியிருப்பது அம்பலமாகியுள்ளது.

இதுகுறித்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 250,000 பேர்கள் தொடர்பான தகவல்களே தற்போது வெளியானதாக கூறப்படுகிறது.சீனா இந்த ரகசிய கண்காணிப்பு நடவடிக்கையை பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த கண்காணிப்பு வளையத்தில் இந்தியர்கள் மட்டுமின்றி, முக்கிய பொறுப்பில் இருக்கும் அமெரிக்க நாட்டவர்கள் 52,000 பேர்கள், ஆஸ்திரேலிய நாட்டவர்கள் 35,000 பேர், இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் 9,700 பேர், கனடா நாட்டவர் 5,000 பேர், இந்தோனேசிய நாட்டவர்கள் 2,100 பேர், முக்கிய பொறுப்புகளில் இருக்கும் மலேசிய நாட்டவர்கள் 1,400 பேர், நியூசிலாந்து நாட்டவர்கள் 793 பேர்கள் என சீனாவின் குறிப்பிட்ட நிறுவனம் தொகுத்து வைத்துள்ளதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உலகமெங்கும் ரகசியமாக செயல்படும் 20 நிறுவனங்கள் மூலமாகவே சீனா இந்த முக்கியஸ்தர்களின் தகவல்களை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.இதில் ஒரு நிறுவனம் அமெரிக்காவின் கான்சாஸ் பகுதியிலும் இன்னொன்று தென் கொரிய தலைநகரிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

முக்கியமாக ராணுவம் தொடர்பான தகவல்களுக்கு மட்டுமே குறித்த நிறுவனம் முக்கியத்துவம் அளிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.மேலும் குறித்த நிறுவனம் ரகசியமாக சேகரித்துள்ள தகவல்கள் அனைத்தும் சீனா அரசுக்கும் ராணுவத்திற்கும் பயன்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் முதல் குற்றவாளிகள் வரை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.மட்டுமின்றி சீனாவின் ரகசிய தகவல் சேகரிப்பு நிறுவனங்களில் எஞ்சிய 18 எண்ணம் எங்கே இருந்து செயல்படுகிறது என்பது தொடர்பில் கண்டறியப்பட்டால் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகலாம் என கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்னர்தான் சீனாவின் ஷென்சென் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஷென்ஹூவா என்ற தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தனது இணையதளத்தின் மூலம் உளவுபார்த்துள்ளது வெளிச்சத்துக்கு வந்தது. ஏப்ரல் 2018 இல் ஷென்ஹூவா ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு, பல்வேறு நாடுகள் மற்றும் மாகாணங்களில் 20 செயலாக்க மையங்களை அமைத்து செயல்பட்டு வந்துள்ளது.

நிறுவனத்தின் இணையதளம் சீன நாட்டின் உளவுத் துறை, ராணுவம், பாதுகாப்பு ஏஜென்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்தியா மட்டும் அல்லாமல் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தும் இந்த நிறுவனம் தகவல்களை திருடியுள்ளது.

ஒருவாரத்துக்கு முன்னர் இந்தியா- சீனா எல்லையில் கடந்த 6 மாதங்களில் ஒரு ஊடுருவல் கூட நடைபெறவில்லை என மாநிலங்களவை உறுப்பினரின் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளித்தது இங்கே கவனிக்கக்கது. இதை அறிவித்த நேரத்தில்தான், கடந்த 6 மாதங்களில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் மொத்தம் 47 முறை ஊடுருவல் முயற்சி நடைபெற்றுள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக ஏப்ரல் மாதம் 24 ஊடுருவல் முயற்சி நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 11 முறையும், மே மாதத்தில் 8 முறையும், மார்ச் மாதத்தில் 4 முறையும் ஊடுருவல் முயற்சி நடந்துள்ளதாவும், ஜூன் மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஊடுருவல் முயற்சி நடைபெறவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

முன்னுக்கு பின்னான இந்திய மத்திய அமைச்சகத்தின் பதில்கள், சீன ரானுவம் மற்றும் தனியார் நிறுவனங்களின் உளவுபார்ப்பு போன்றவை யாவும், பலருக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.