கொரோனா பாதிப்பின் தீவிரம் காரணமாக, இந்தியாவில் பொருளாதார மந்தம் உச்சத்தில் இருக்கின்றது. இதனால் பொருளாதார இழப்புகள், மருத்துவம் சார்ந்த பிரச்னைகள் என பல்வேறு எதிர்ப்புகளை மத்திய அரசு சந்தித்து வருகின்றது.

இந்நிலையில், ``கடன் சுமை அதிகரித்தாலும் 5,000 கோடி ரூபாய் மருத்துவ செலவு செய்யவேண்டும்" என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு, 275 பக்க அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரங்கராஜன் தமிழக பொருளாதாரத்தை மீட்க பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த அறிக்கை தொடர்பாக அரசு பரிசீனை செய்து நடடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 

முக்கியமாக இரண்டு பிரிவுகளில் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், நிவாரணம், புதுபித்தல் மற்றும் குறுகிய காலத்தில் செய்யவேண்டியது என்று அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளதாகவும் கூறினார்.

மேலும் கொரோனா பாதிப்பால் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ளது என்றும், முழு அடைப்பில் இருந்து விடுபட்டால் தான் வளர்ச்சி அதிகமாகும் என்றும் ரங்கராஜன் தெரிவித்தார். தொற்று பரவாமல் இருக்க வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் செய்யவேண்டும் என்றும், இந்த கொரோனா பாதிப்பில் இருந்து எவ்வளவு சீக்கிரம் வெளியே வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியே வந்தால் பொருளாதாரம் மேம்படும் என்றும் குறிப்பிட்டார்.

பொருளாதார நிபுணர்கள் குழுவின் கணிப்பின்படி, 2020-21 இல் வளர்ச்சி 1.71 சதவீத்மாக இருக்கும். மற்றொரு கணக்கின்படி பார்த்தால் சரிவு இருக்கும் என்றும் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதார வளர்ச்சி நிலை, இப்பொழுது எந்த அளவிற்கு இருக்கும் என்று சொல்வது கடினம் என்றும் கூறினார்.

அதே போல பொருளாதார வளர்ச்சி தொடர்பாக சில அறிகுறிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதாவது ஜிஎஸ்டி வரி வசூல், பெட்ரோல் வரி, மின்சாரம் உபயோகம் போன்றவற்றால் கொரோனாவிற்கு முன் இருந்த நிலையை நோக்கி சென்று கொண்டு இருப்பதாகவும், அடுத்த 2 மாதங்களில் இயல்பு நிலைக்கு வரலாம் என்றும் ரங்கராஜன் தெரிவித்தார்.

ரங்கராஜன் குழு அளித்த முக்கியமான பரிந்துரைகள், இங்கே...

1. அதிகப்படியாக அரிசி மக்களுக்கு நவம்பர் மாதம் வரை கொடுக்கப்படவுள்ளது, அதை இந்தாண்டு வரை நீடிக்கவேண்டும்.

2. வேலை வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக கிராமபுறத்தில் உழைப்புக்கு உத்திரவாதம் கொடுக்கும் திட்டம் இருக்கிறது. அதை போல நகர்புறத்திலும் ஏற்படுத்தலாம்.

3. கொரோனா நிவாரண உதவியாக 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாகவும் பரிந்துரை செய்துள்ளோம். அரசு தான் முடிவு செய்யவேண்டும்.

4. கட்டுமான பணியாளர்கள் தொடர்பான நிதி 3200 கோடியை உள்ளது, அதை உடனே பயன்படுத்தவேண்டும்.

5. மூலதன செலவு தொடர்பாக  நிதிநிலையில் தெரிவித்தை விட 10 ஆயிரம் கோடி செலவழிக்க சொல்லியுள்ளோம்.

6. தொழில் வளர்ச்சிக்கு மூலதனத்தை ஆயிரம் கோடியாக உயர்த்தவும், தொழில்பூங்காக்களை உண்டாக்கி சிறுதொழிலுக்கு ஒரு பங்கை தரவேண்டும்.

7. சிறு தொழிலுக்கு கடன் உ.த்திரவாத திட்டத்தை உருவாக்கவேண்டும்.

அரசிற்கு வருமானம் குறைந்துள்ளதாகவும், மருத்துவ செலவும் அதிகரித்துள்ளதாவும் தெரிவித்த ரங்கராஜன், நிதிபற்றாக்குறை ஏற்படும் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு சுகாதாரத்திற்காக ரூ.5000 கோடி செலவாகும் எனவும், இதனால் வருவாய் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் என்றும் கூறினார்.

மத்திய அரசு தரவேண்டிய நிலுவையில் உள்ள தொகையை பெறுவது தொடர்பாகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நீண்ட கால நோக்கில் பொருளாதார மேம்படுவதற்கு என்ன வேண்டும் என்ற அடிப்படையில் பொருளாதார நிபுணர் குழு பரிந்துரைகள் அளித்துள்ளதாக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தெரிவித்தார்.