சென்னையில் கடந்த 2 மாதங்களில் அடுத்தடுத்து 602 சைபர் கிரைம் குற்றங்கள் அரங்கேறி உள்ளதாகக் காவல் துறை தரப்பில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இந்த ஊரடங்கு காலத்திலும், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பங்கள் முன்பை விட தற்போது அதிகரித்து உள்ளதாக செய்திகள் வெளியானது.

அத்துடன், கொரோனா வைரஸ் காரணமாகப் பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கால், பலரும் வேலையிழந்து தவித்து வருவதால், பலரும் பல வித குற்றங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ச்சியாக போலீசாருக்கு புகார்கள் குவியத் தொடங்கினர்.

குறிப்பாக, தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நிலவும் சைபர் குற்றங்களைப் பொறுத்த வரை, அந்தந்த காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்வதைக் காட்டிலும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்குத் தொலைதூரத்திலிருந்து வந்து புகார் அளிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் தற்போது கிரைம் சார்ந்த குற்றங்கள் அதிகரித்துக் காணப்படுவதாலும், அப்படி கிரைம் சார்ந்த குற்றத்தால் பாதிக்கப்படும் பொது மக்கள் தேவையிலாம் அலையாமல் இருக்கும் வகையிலும், சைபர் மோசடி குற்றத்தால் இழந்த பணத்தை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பொது மக்கள், சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தால் விரைவில் மீட்டுத் தருவதற்கு வாய்ப்பு உள்ளதாலும், பொது மக்களுக்காக காவல் மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் கூட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இதில், 12 சைபர் கிரைம் பிரிவு தொடங்கி வைக்கப்பட்டது. இப்படியா, இந்த 12 சைபர் கிரைம் பிரிவும் தொடங்கப்பட்டு தற்போது 2 மாதங்கள் ஆகின்றன.

அதன்படி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சைபர் கிரைம் பிரிவுகளால், பொதுமக்களுக்கு சைபர் மோசடியில் இழந்த பணத்தை உடனடியாக அந்த வங்கி அதிகாரிகளிடம் பேசி, அந்த பணத்தைக் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்குச் செல்லாமல் தடுக்கும் விதமாகவும், இழந்த பணத்தை மீட்டுக் கொடுத்து மோசடியைத் தடுத்து நிறுத்தியும் போலீசார் துரிதமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில், இது வரையில், சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையங்களில் ஆன்லைன் மோசடி, ஓ.டி.பி. மோசடி, வேலை வாய்ப்பு மோசடி, பெண்களைத் துன்புறுத்துவது, ஆபாச பதிவுகள் போன்ற பல்வேறு விதமான சைபர் குற்றங்கள் தொடர்பாக வடக்கு மண்டலத்தில் 57 வழக்குகளும், தெற்கு மண்டலத்தில் 292 வழக்குகளும், கிழக்கு மண்டலத்தில் 115 வழக்குகளும், மேற்கில் 138 வழக்குகள் என்று மொத்தம் 602 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “இது போன்ற சைபர் கிரைம் வழக்குகளில் இது வரை 57 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளதாகவும், பொது மக்கள் இழந்த தொகையான 22 லட்சத்து 81 ஆயிரத்து 632 ரூபாய் உடனுக்குடன் மீட்டுக் கொடுத்துள்ளதாகவும்” தமிழக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், “பொதுமக்கள் தங்களது ஏ.டி.எம். கார்டு பற்றிய தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும், அப்படிப் பணத்தை இழந்து விட்டால் உடனடியாக சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் படியும்” சைபர் கிரைம் பிரிவு காவல் துறையினர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

அதே நேரத்தில், “சைபர் கிரைம் குற்றத்தில் யார் யாரெல்லாம் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், எந்தந்த பகுதிகளில் இது போன்ற குற்றங்கள் அதிகமாக காணப்படுகிறது என்பதையும் போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன.