ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அரியலூரைச் சேர்ந்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த நிலையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அரியலூர் மாவட்டம் நந்தியன் குடிகாடு பகுதியைச் சேர்ந்த 19 வயதான சிவசங்கரி என்ற இளம் பெண், அதே பகுதியைச் சேர்ந்த முத்துசெல்வன் என்ற இளைஞரான காதலித்து வந்து உள்ளார். இருவரும் கடந்த பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர்.

அத்துடன், காதலர்களாக இருவரும் அந்த பகுதியின் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்துள்ளனர். தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக, காதலர்கள் இருவரும் தங்களது வீட்டில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இளம் பெண் சிவசங்கரி வீட்டில் அவரது பெற்றோர் திருமண பேச்சை எடுத்து உள்ளனர். அப்போது, சிவசங்கரி தன் காதல் விசயத்தை தன் பெற்றோரிடம் கூறி உள்ளார்.

அப்போது, காதலின் குடும்பம் மற்றும் அவர்கள் சார்ந்த சமூகம் பற்றியும் சிவசங்கரியின் பெற்றோர் விசாரித்து உள்ளனர். அதன்படி, காதலன் மற்றும் அவரது குடும்பத்தார் பற்றி சிவசங்கரி எல்லா விவரங்களையும் கூறி உள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிவசங்கரியின் பெற்றோர், “இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், காதலுக்கு சிவசங்கரியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால், கவலை அடைந்த காதலர்கள், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ளத் தக்க சமயம் பார்த்துக்கொண்டு இருந்து உள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் இளம் பெண் சிவசங்கரியும், காதலன் முத்துசெல்வனும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருச்சிக்கு வந்து காதல் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, “எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்” என்று, கேட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்றைய தினம் தஞ்சம் அடைந்தனர். 

அப்போது, மகளிர் போலீசார், காதலர்கள் இருவரையும் “அரியலூர் மாவட்ட காவல் நிலையம் சென்று, அங்குத் தஞ்சமடைய” அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், “அரியலூருக்குச் சென்றால், தங்கள் இருவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை” என்று, காதலர்கள் இருவரும் கூறி உள்ளனர். ஆனால், அதனை போலீசாரும் ஏற்க மறுத்து உள்ளனர். இதனால், வேறு என்ன செய்வது என்று தெரியாத காதலர்கள் இருவரும், அந்த காவல் நிலையம் முன்பு  திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், இருவரிடமும் புகாரைப் பெற்றுக்கொண்டு, இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

அத்துடன், காதலர்களின் இரு வீட்டார் பெற்றோரையும் விசாரணைக்கு அழைத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும், காதலர்கள் இருவரும் பயத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞரின் காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.