தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த தனிஸ்லாஸ் என்பவரது மகன் செல்வன். இவர் அந்த பகுதியில் தண்ணீர் கேன் வியாபரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், செல்வனுக்கும் உசரத்துக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மகராஜன் என்பவரின் மகன் திருமணவேலுக்கும் இடத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. திருமணவேல் அதிமுகவில் அப்பகுதியில் முக்கிய நபராக இருக்கிறார். 

இந்த நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்னர் உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செல்வனை சிலர் காரில் கடத்தி சென்றுள்ளனர். அதோடு காரில் வைத்து கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளார். பிறகு கொலை செய்து தட்டார்மடம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் உடலை வீசி விட்டு கொலையாளிகள் தப்பிவிட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வனின் மரணத்தில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட மேலும் சிலர் மீது (107, 336, 302, 364) உள்ளிட்ட 4 பிரிவுகளில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் அன்றைய தினமே தெரிவித்தார்.

ஆனால் இந்த கொலைக்கு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உடந்தை என்று கூறி அவரை கைது செய்ய சொக்கன் குடியிருப்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் மட்டுமன்றி, காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திருமணவேல்  உட்படக் கொலைக்குத் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும் வரை செல்வனின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதுபோன்று தங்களது கட்சி நிர்வாகியான செல்வன் கொலைக்கு தொடர்புடையர்களை கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினர்.

செல்வன் கொலை  விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

அதன்படி, டிஜிபி திரிபாதி இன்று (செப்டம்பர் 21) செல்வன் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.  ஏற்கனவே சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை கொலை வழக்கை முதலில் கையிலெடுத்த சிபிசிஐடி போலீசார் அடுத்தடுத்து 10 போலீசாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது செல்வன் கொலை வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், விரைவில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்பட 2 பேர் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.  அவர்களை 3 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,  தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திருமணவேலை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி  கட்சி ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

அதுபோன்று செல்வன் மரணத்துக்கு நீதி கேட்டு திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கொக்கன்குடியிருப்பில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், அவரது கார் நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத இருவரால் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஜின்னா மற்றும் செல்வநாயகம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.