மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லக்ஷ்மி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் மற்றும் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுமையாக முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தற்போது விளம்பரப்படுத்தும் பணிகளைப் படக்குழு தொடங்கியுள்ளது.

சமீபத்தில் வெளியான கர்ணன் டீஸர் ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது. சந்தோஷ் நாராயணன் இசையில் கர்ணன் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

குறிப்பாக இதில் பண்டாரத்தி புராணம் என்ற பெயரில் பாடலொன்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுப்படுத்துவதாகக் கூறி, இதனைப் படத்திலிருந்தும், இணையத்திலிருந்தும் நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார் மாரி செல்வராஜ்.

இந்நிலையில் படத்தின் நான்காம் பாடல் கர்ணனின் யுத்தமான உட்ராதீங்க எப்போவ் பாடல் நாளை வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் தனுஷ் ரசிகர்கள். 

தனுஷ் தற்போது தி கிரே மேன் படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார். ஹாலிவுட் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் முழுவதும் தொடர்ந்து தனுஷ் படம் தொடர்பான அப்டேட்டுகள் மற்றும் தனுஷ் தேசிய விருது வாங்கிய செய்தி என ருசிகர செய்திகள் வெளியாகி வருகின்றன.