கடந்த 2017-ம் ஆண்டு சந்தானம் நடித்த சக்கபோடு போடு ராஜா திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வைபவி சாண்டில்யா. அதனைத் தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, கேப்மாரி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இதில் சர்வர் சுந்தரம் படம் மட்டும் சில சிக்கலால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

தற்போது தமிழில் பெயரிடப்படாத சில படங்களில் நடித்து வருகிறார் வைபவி சாண்டில்யா. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கொரோனா தொற்று குறித்து பேசி வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் வைபவி கூறியிருப்பதாவது:

புதன்கிழமை அன்று எனக்கு காய்ச்சலும், உடல் வலியும் இருந்தது. அதிக சோர்வாக உணர்ந்தேன். அதனால் கோவிட் பரிசோதனை மேற்கொண்டேன். தொற்று இல்லை என்று முடிவு வந்தது. ஆனால், நான் காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் வந்த உடனேயே எடுத்துவிட்டதால் சீக்கிரமாக அது தொற்று இருப்பதாகக் காட்டியிருக்காது என்று எனது மருத்துவர்கள் கூறினர்.

எனக்கு வறட்டு இருமலும் இருந்தது. மூன்று நாட்கள் கழித்து, அதாவது நேற்று மீண்டும் கோவிட் பரிசோதனை செய்துகொண்டேன். இப்போது தொற்று இருப்பதாக முடிவு வந்திருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, என் அம்மா, அப்பா என வீட்டில் மூவருக்கும் தொற்று இருக்கிறது. உடல்நிலை மோசமாக இல்லை. நலமாகவே இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

நேற்றைய நாளில் மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.