ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அந்தாதூன். 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றி தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் ஆயுஷ்மான் நடித்த ரோலில் டாப் ஸ்டார் பிரசாந்த் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்காக பிரசாந்த் பல ட்ரைனிங் செய்து வந்தார் என்றும். இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கவிருந்தார் என்றும் செய்திகள் வெளியாகி வந்தது. இந்நிலையில் படத்திலும் படக்குழுவிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 

அந்தாதூன் தமிழ் ரீமேக்கை இயக்குனர் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் இயக்கவுள்ளாராம். 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜோதிகா நடித்து வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை இயக்கியிருந்தார். தரமான கதைக்கருவுடன் பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கியிருந்தவர், இந்த ரீமேக்கிலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வாறு படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

படத்தில் கதைப்படி ஐந்து நாயகிகள் நடிக்கவுள்ளார்கள் என்று தெரிகிறது. பொன்மகள் வந்தாள் படத்தில் இயக்குனர் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக்கின் திறனை கண்ட தியாகராஜன், இந்த வாய்ப்பினை வழங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்காக டாப் ஸ்டார் பிரசாந்த் 23 கிலோ உடல் எடையை குறைந்துள்ளாராம். விரைவில் படம் பற்றியும், படக்குழு பற்றியும் தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

சில நாட்கள் முன்பு அந்தாதூன் தெலுங்கு ரீமேக் பற்றிய தகவல் தெரியவந்தது. நிதின் ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தில் தமன்னா மற்றும் நபா நடேஷ் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர். 

ஒரு கொலை நிகழ்கிறது. அந்தக் கொலையைச் செய்தவர் யாரென்று அவனுக்குத் தெரியும். அந்தக் கொலையை எப்படி மூடி மறைக்கிறார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனால், அந்தக் கொலைக்கு அவன் சாட்சியாக முடியாது. காரணம், அவன் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி. கொலைக்குச் சாட்சியாக மாறும் பார்வையற்றவனின் மெல்லிசை தான் இந்த அந்தாதுன் படத்தின் கதைக்கரு.