நாமக்கல் அருகே 12 வயது, 13 வயதுடைய சிறுமிகள் இருவருக்கும் கடந்த 6 மாதங்களாக 75 வயது முதியவர் உள்பட 6 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை அடுத்து உள்ள அணைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் - முத்துசாமி தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 13 வயதிலும், 12 வயதிலும் இரு மகள்கள் உள்ளனர்.

இதனிடையே, பழனியம்மாளின் கணவர் முத்துசாமி இறந்து விட்டதால், பழனியம்மாள் மட்டும் தனது இரு மகளையும் வளர்த்து வந்தார். இரு மகள்களும், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்த நிலையில், பழனியம்மாள் மட்டும் அங்குள்ள தனியார் ஜவ்வரிசி ஆலையில் பணிபுரிந்து வந்தார். 

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், சிறுமிகள் இருவரும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளனர். சிறுமிகளின் தயார் பகலில் வேலைக்குச் சென்று விட்டு, இரவு தான் வீடு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில், இந்த இரு சிறுமிகளையும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கடந்த 6 மாதங்களாகத் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளனர். மேலும், இது குறித்து வெளியே கூறினால், உங்கள் இருவரையும் கொன்று விடுவோம் என்றும், பாலியல் வன்கொடுமை செய்வோர் தொடர்ந்து மிரட்டி  வந்து உள்ளனர்.

இதனால், உயிருக்குப் பயந்து அஞ்சி நடுங்கிய அந்த இரு சிறுமிகளும் இது குறித்து வெளியே யாரிடமும் கூறாமல் அமைதியாக இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக, சிறுமிகள் இருவரும் மிரட்டலுக்குப் பயந்து வெளியே யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்ததால், அதையே தங்களுக்குச் சாதமாக பயன்படுத்திக்கொண்ட அந்த காம வெறிபிடித்த கும்பல், அந்த சிறுமிகளைப் பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

இதனால், அந்த மிருக கும்பலின் பிடியிலிருந்து சிறுமிகள் இருவரும் மீள முடியாமல் தவித்து வந்து உள்ளனர். ஆனால், அந்த மிருக கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் காணப்பட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் அந்த கும்பலின் பாலியல் டார்ச்சர் தாங்க முடியாமல் சிறுமிகள் தவித்து வந்து உள்ளனர். குறிப்பாக, சிறுமிகள் இருவருக்கும் உடல் முழுவதும் காயங்களும், ஏற்பட்டு வலியால் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சிறுமிகள் எப்படியோ இதைக் கூறி கதறி அழுது உள்ளனர். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அப்பகுதியைச் சேர்ந்த சிலரை நோட்டமிட்டு உள்ளனர். இதனையடுத்து, சிலர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து வருவதை உறுதி செய்துகொண்ட அக்கம் பக்கத்தினர், மாவட்ட குழந்தைகள் நல நல அலுவலர் ரஞ்சித பிரியாவிடம் புகார் அளித்து உள்ளனர்.

இதனையடுத்து நாமக்கல் மாவட்ட குழந்தை நல அலுவலர்கள் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் அதே பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் முத்துசாமி, 45 வயதான சண்முகம், 31 வயதான செந்தமிழ் செல்வம், 30 வயதான மணிகண்டன்? 26 வயதான சிவா, 23 வயதான சூர்யா ஆகிய 6 பேரையும் அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தாய் பழனியம்மாள் வேலைக்குச் சென்று விட வீட்டில் 2 சிறுமிகளும் தனியாக இருந்து வந்து உள்ளனர். இந்த சூழலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த அந்த 6 பேர் கொண்ட கும்பல், கடந்த 6 மாதங்களாக இரு சிறுமிகளையும் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது. 

மேலும், இந்தச் சம்பவத்தில் அதேப் பகுதியை சேர்ந்த மேலும் சிலர் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களையும் கண்டறிந்து கைது செய்யும் முயற்சியில் போலீசார் தற்போது ஈடுபட்டு உள்ளனர். அத்துடன், இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளையும் மீட்ட போலீசார், அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, நாமக்கல் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்து உள்ளனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.