கடந்த 2008-ம் ஆண்டு தமிழில் சசி இயக்கத்தில் வெளியான பூ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படத்தை அடுத்து அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. கடந்த 2011-ம் ஆண்டு வெளியான சென்னையில் ஒரு நாள் படத்தில் நடித்திருந்தார். 

தனுஷூடன் பார்வதி நடித்த மரியான் திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. பரத் பாலா இயக்கிய அந்த படத்தில் எதார்த்தமான ரோலில் நடித்து ஈர்த்தார் பார்வதி. உலகநாயகன் கமல் ஹாசனுடன் உத்தமவில்லன், ஆர்யா நடித்த பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த பார்வதிக்கு பாலிவுட் கதவுகளும் திறந்தன. 

இந்தியில் கரிப் கரிப் சிங்கிள் என்ற படத்தில் இர்பான் கானுடன் நடித்திருந்தார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வரும் அவர், உயரே என்ற படத்தில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்டப் பெண்ணாக நடித்திருந்தார். 

இந்நிலையில் இவர் மலையாள நடிகர் சங்கமான அம்மா-வில் இருந்து நேற்று விலகியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு நடிகை ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக நடிகர் சங்கம் செயல்படுவதாக, சில நடிகைகள் புகார் கூறினர்.

பின்னர் நடிகைகள் ரிமா கல்லிங்கல், கீது மோகந்தாஸ், ரம்யா நம்பீசன், பாதிக்கப்பட்ட நடிகை உள்பட சிலர் சங்கத்தில் இருந்து விலகி, திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை ஆரம்பித்தனர். ஆனால், இந்த அமைப்பில் இருந்த நடிகை பார்வதி, மலையாள நடிகர் சங்கத்திலும் தொடர்ந்து வந்தார். இந்நிலையில், மலையாள நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட, சில வருடங்களுக்கு முன் டிவென்டி 20 என்ற படம் தயாரிக்கப்பட்டது.

இதில் அனைத்து நடிகர், நடிகைகளும் நடித்து இருந்தனர். இப்போதும் சங்கத்துக்கு நிதி திரட்ட, அந்த படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க உள்ளனர். இதுபற்றி பேட்டியளித்த நடிகர் சங்க செயலாளரான இடைவேளை பாபுவிடம், இதில் முதல் பாகத்தில் நடித்த, கடத்தப்பட்ட நடிகை இடம்பெறுவாரா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், காட்டமான கருத்தைச் சொன்னார். அவர், நடிகர் சங்கத்தில் தற்போது உறுப்பினராக இல்லை. இறந்த ஒருவர் எப்படி திரும்ப வர முடியும்? என்று கேட்டார். இதனால் ஆவேசமான நடிகை பார்வதி, அவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

இதுபற்றி பார்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018 ஆம் ஆண்டு என் தோழிகள் நடிகர் சங்கத்தில் இருந்து விலகினாலும் நான் விலகவில்லை. சங்கத்தை சீரமைக்க சிலராவது இருக்க வேண்டுமே என்று நினைத்தேன். இடைவேளை பாபுவின் பேட்டியை பார்த்த பிறகு, இங்கு மாற்றம் வரும் என்ற என் எதிர்பார்ப்பு வீணாகிவிட்டது. நடிகர் சங்கத்தால் கைவிடப்பட்ட பெண் உறுப்பினரை, இறந்தவருடன் ஒப்பிட்டது மிகவும் மோசமானது, அருவெறுப்பானது. குமட்டல் மனப்பான்மையை காட்டுகிறது. 

இந்த விஷயத்தை மீடியா விவாதிக்கத் தொடங்கும்போது இடைவேளை பாபுவுக்கு ஆதரவாக பலர் பேசுவார்கள் என்பதும் எனக்கும் தெரியும். இனியும் இந்த சங்கத்தில் இருப்பதால் எந்த பலனும் இல்லை. இதனால் எனது நடிகர் சங்க உறுப்பினர் பதவியை, ராஜினாமா செய்கிறேன். அதே நேரம் நடிகர் இடைவேளை பாபுவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். இதையும் பலரும் கோருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு நடிகை பார்வதி கூறியுள்ளார்.

நடிகை பார்வதியின் இந்த திடீர் முடிவு மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்வதி நடிப்பில் ரச்சியம்மா மற்றும் வர்த்தமனம் போன்ற திரைப்படங்கள் உள்ளது.