பாஜகவில் தமிழ் சினிமா பிரபலங்கள் வரிசை கட்டி நிற்பதால், சினிமா பிரபலங்களை வைத்தே தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற அரசியல் அஸ்திரத்தை பாஜக கையில் எடுத்து உள்ளதா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

நடிகை குஷ்பு, இன்று பா.ஜ.க.வில் இணைய உள்ளதற்காக டெல்லியில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை இன்று அவர் சந்திக்கிறார் என்றும் தகவல் நேற்று இரவே வெளியானது. இப்படியான நிலையில் தான், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு இன்று காலை அதிரடியாக நீக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, “காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகச் சோனியா காந்திக்கு” நடிகை குஷ்பூ கடிதம் எழுதிவிட்டு, இன்று பிற்பகலிலேயே நடிகை குஷ்பு, பாஜகவில் அதிகப் பூர்வமாக இணைந்தார். தமிழகத்தில் இது தான் இன்றைய ஹாட் டாப்பிக்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பாஜகவில் வரிசை கட்டும் தமிழ் சினிமா பிரபலங்கள் யார் யார் என்று தற்போது ஒருமுறை பார்த்து விடலாம். 

நடிகர், நடிகைகள் அரசியலுக்கு வருகை ஒன்றும்  புதிதில்லை. ஆனால், இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அதிகபட்சமான எண்ணிக்கையில் பாஜக வில் தங்களை ஐக்கியப் படுத்திக்கொண்டு வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு, மூத்த நடிகர் நடிகைகள் தான் அரசியலுக்கு வருகிறார்கள் என்றால், இளம் வயதில் இருக்கும் நடிகர், நடிகைகளும் பாஜகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். ஒரு வேலை சினிமாவில் வெற்றி வாகை சூடவில்லை என்றால், அரசியல் புகழ் பெறலாம் என்பதாலா? என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் தனிக் கட்சி தொடங்கப் போகிறார் என்று, என்னதான் கூறினாலும் அவர் பாஜகவின் ஆதரவு நிலைப்பாட்டையே தொடர்ந்து எடுத்து வருகிறார். அதனால், அவர் தனிக் கட்சி தொடங்கினால் கூட பாஜக வின் பக்கம் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் தனிக்கட்சி தொடங்கினாலும், நிச்சம் அவர் பாஜக கூட்டணியையே அவர் விரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் கமல் தனிக்கட்சி தொடங்கி முழு நேர அரசியல்வாதியாகவே மாறினாலும் கூட தமிழக அரசைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஆனால், அவருக்கு எதிராக மத்திய பாஜக அரசு இதுவரை ஒரு எதிர் கருத்தைக்கூட இதுவரை கூறியதில்லை. அதனால், தேர்தல் நேரத்தில் அவரும் பாஜக பக்கம் நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும், அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுகின்றன.

நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாத பொருளாக மாறியபோது, “பாஜகவில் இணைந்து உழைத்தால் நல்ல நிலைக்கு வர முடியும்” என்று பாஜகவில் உள்ளவர்களே சூர்யாவிற்கு வலை விரித்தனர். 

மேலும், தமிழ் திரையுலக பிரபலங்களை பாஜகவில் இணைக்கும் முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாகத் தான், நடைபெற்று வருகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய இணை அமைச்சராகவும் திமுகவில் பணியாற்றிய நடிகர் நெப்போலியன் முதல் முதலில் பாஜக அழைப்பை ஏற்று, அக்கட்சியில் வந்து இணைந்தார். அவரைத் தொடர்ந்து, இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன், பாஜகவில் வந்து இணைந்தார். இதனையடுத்து, அவர் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கினார். 

அதேபோல், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா சமீபத்தில் தமிழகம் வந்த போது, நடிகை நமீதா அவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவரைப் போலவே இயக்குநர்கள் பேரரசு, கஸ்தூரிராஜா, இசையமைப்பாளர் தீனா, பரத்வாரஜ், நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர். 

அத்துடன், நடிகர் எஸ்.வி.சேகர் ஏற்கனவே பாஜகவில் இணைந்து விட்ட நிலையில், நடிகர்கள் ராதாரவி, பொன்னம்பலம், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், பொன்னம்பலம், பாபு கணேஷ், தயாரிப்பாளர் நடராஜன் ஆகியோரும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பாஜகவில் இணைந்தனர்.

அதேபோல் நடிகைகள் கவுதமி, குட்டி பத்மினி, மதுவந்தி உள்ளிட்டோரும் பாஜகவில் அடுத்தடுத்து தங்களை இணைத்துக்கொண்டனர். இதன் காரணமாக, தமிழக பாஜக சினிமா நட்சத்திரங்களின் பட்டாளங்களைக் கொண்டு உள்ளது.

நடிகர்கள் விஷால் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோருக்கு சமீபத்தில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை, அழைப்பு விடுத்துள்ளார். இதனால், விரைவில் அவர்கள் இருவரும் பாஜகவில் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனை நடிகர் சமுத்திரக்கனி மறுத்துள்ளார். ஆனால்,  விஷால் மட்டும் இதுவரை எந்த விளக்கமும் அளிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார்.

இந்த சினிமா பட்டாளத்தை வைத்தே, எதிர் வரும் தமிழக தேர்தல்களை பாஜக தன் வசப்படுத்தக் காத்திருக்கிறது. இந்த சினிமா பிரபலங்களையே அரசியலின் பிரச்சார பீரங்கிகளாகத் தமிழக மக்களிடையே களம் இறக்கவும், அவர்களில் சிலரை வேட்பாளராகக் களம் இறக்கவும் பாஜக அதிரடியான அஸ்திரத்தைக் கையில் எடுத்திருக்கிறது.

இந்த சினிமா நடிகர், நடிகைகளைக் காண கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா? தமிழக மக்கள் சினிமா மயக்கத்தில் தங்கள் ஓட்டையே விட்டுக் கொடுப்பார்களா? என்று பல விதமான கேள்விகள் நம்முன் எழுந்துள்ளன. 

என்ன தான் இருந்தாலும், பிரபலமானவர்களை தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம், அதிலிருந்து கணிசமான வாக்குகளைப் பெறலாம் என்பதும், ஒரு சாணக்கிய தனம் என்றும், அரசியல் விமர்சகள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது, அப்படியான ஒரு சாணக்கிய தனத்தையே பாஜக தன் கையில் எடுத்து உள்ளது. இதனால், பெரும் சினிமா படையோ தேர்தலைச் சந்திக்க உள்ள பாஜக தேர்தலில் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் காண வேண்டும்.