கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு வரும் 14-ம் தேதி தேர்வு நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13ம் தேதி தேசிய தேர்வு முகமை அமைப்பினால் நடத்தப்பட்டது. அதேபோன்று ஜே.இ.இ தேர்வும் அதே மாதம் 1 முதல் 6ம் தேதிவரை நடத்தி முடிக்கப்பட்டு அதன் முடிவுகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கொரோனோ வைரஸ் தொற்று காரணத்தினால் மேற்கண்ட தேர்வுகளை எழுதாமல் பல மாணவர்கள் தவிர்த்து விட்டனர். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டை விட 13 சதவீத மாணவர்கள் தற்போது நீட் தேர்வை எழுதவில்லை. இதே நிலை தான் நாடு முழுவதும் உள்ளது.

இந்த நிலையில், மேற்கண்ட விவகாரத்தில் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ' கொரோனோ வைரஸ் தொற்றுக் காரணத்தினால் நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் நடந்து முடிந்த நீட்  தேர்வுவை எழுத முடியாமல் போனது. அதனால் இவ்வாறு தேர்வு எழுதத் தவறி மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த தேதி ஒதுக்கிடுமாறு தேசிய தேர்வு முகமைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு வரும் 14ம் தேதி தேர்வு நடத்த வேண்டுமென தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில்,  நீட் தேர்வின் முடிவுகள்  வரும் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் நீட் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு மற்றும் பொதுமுடக்கம் காரணமாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பலர் தேர்வினை எழுத முடியவில்லை. மேலும், கடந்த செப். 13 ஆம் தேதி நடைபெற்ற தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகும் என கூறப்படும் நிலையில், அக்டோபர் 16 ஆம் தேதி தேர்வு முடிவினை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனினும், தேர்வு எழுதாதவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்துவது குறித்து தேசிய தேர்வு முகமை ஆலோசித்து முடிவெடுக்கும் என்று தெரிகிறது.