தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் நேற்று திங்கட்கிழமை (அக்டோபர் 12) இரவு 11 மணியளவில், வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93. இதைத் தொடர்ந்து முதல்வரின் தென் மாவட்டச் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்த எடப்பாடி பழனிசாமி நேற்று இரவே அவசரமாக புறப்பட்டு சேலம் சென்றார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள். இவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுங்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட, சிலுவம்பாளைம் கிராமத்தில் வசித்தார். இவர் கணவர் கருப்ப கவுண்டர் ஏற்கெனவே இறந்து விட்டார்.

சென்னையில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவ்வப்போது சேலம் சென்று தனது தாயாரைச் சந்தித்து வருவது வழக்கம். வயது மூப்பு காரணமாக, அவரது தாயாருக்கு அவ்வபோது சில உடல்நல சிக்கல்கள் இருந்தாலும்கூட, அவர் நன்றாகவே இருந்து வந்தார். இப்படியான சூழலில், சமீபத்தில் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டிருந்திருக்கிறார் முதல்வரின் தாயார். பின் அங்கிருந்து அண்மையில் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
 
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் வயோதிகப் பிரச்சினைகள் காரணமாக தவசாயி அம்மாள் மரணம் அடைந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று கன்னியாகுமரி மாவட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த அவர் தனது தென் மாவட்டச் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக சேலம் திரும்பினார்.

தவசாயி அம்மாளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, மேலும் கோவிந்தராஜ் எனும் இரு மகன்களும், ரஞ்சிதம் (எ) விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். முதல்வரின் தாயார் மரணத்துக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தகவல் அறிந்தவுடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து கிளம்பி வந்து, தன் தாயாருக்கு கண்ணீரோடு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும், தாயாரின் மறைவு செய்தியை அறிந்தவுடன், இன்று நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு, நள்ளிரவு 1:00 மணிக்கு சென்னையிலிருந்து கார் மூலம் கிளம்பி விடியற்காலை 5:30 மணிக்கு வீட்டிற்கு சென்றடைந்திருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் என பல தரப்பினரும் முதல்வர் பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

முதல்வர் இன்று கொரோனாவுக்கான தடுப்பு நடவடிக்கைகளை ஆராய்வதற்காக பயணப்படுவார் என கூறப்பட்டிருந்த காரணத்தினால், தென் மாவட்டங்கள் பலவற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகதில், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டமும் நடைபெற இருந்தது. இதன்காரணமாக, அங்கு பல்வேறு பிரத்யேக ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவை அனைத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வந்துக் கொண்டிருந்தார். கடம்பூர் ராஜூ அந்த நேரத்தில் பேசுகையில், `தூத்துக்குடி மக்களின் கனவாக இருந்த பல திட்டங்களை முதல்வர் அறிவிக்க உள்ளார். அவரது வருகை தூத்துக்குடி மாவட்ட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கும்' என தெரிவித்தார். மேலும் முதல்வர் சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறினார். தற்போது இந்தப் பயணம் ஒத்திப்போகும் என்று கணிக்கப்படுகிறது.