ஆடுகள் இடம் மாறி மேய்ந்ததால், காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளதால், தமிழகத்தில் சாதிய வன்கொடுமை  இன்னும் கொடிகட்டிப் பறக்கிறது என்பதைக் காட்டும் விதமாக உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சாதிகள் இன்னும் ஒழிய வில்லை என்பதற்கு உதாரணம் தான் தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது அரங்கேறி இருக்கக்கூடிய இந்த பயங்கர சம்பவம் அமைந்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா பகுதியைச் சேர்ந்த ஓலைக்குளம் கிராமத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கயத்தாறு ஓலைக்குளம் கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர், தனது ஆடுகளை வளர்த்துப் பிழைப்பு நடத்தி வருகிறார். இவர், நாள் தோறும் தன்னுடைய ஆடுகளை அந்த பகுதியில் உள்ள செடி கொடிகள் அடர்ந்த பகுதிக்கு மேய்ச்சலுக்கு விட்டுச் செல்வது வழக்கம். அப்படிதான், நேற்றைய தினமும் தன்னுடைய ஆடுகளை வழக்கமான மேய்ச்சல் நிலத்திற்கு அழைத்துச் சென்று உள்ளார். அப்போது, அவருடைய ஆடுகள் அந்த இடத்தை விட்டு விட்டு, அருகிலிருந்த மேல் சாதியைச் சேர்ந்தவரின் நிலத்தில் மேய்ந்ததாகக் கூறப்படுகிறது.

பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் வளர்த்த ஆடுகள், வழி மாறி உயிர் சாதியினரின் வயலில் இடம் மாறி மேய்ந்தால், கடும் ஆத்திரமடைந்த ஆதிக்கச்சாதி நில உரிமையாளர் ஆடுகளைப் பிணையாகப் பிடித்துக்கொண்டு உள்ளார். இதனால், பதறிப்போன அந்த ஆட்டின் உரிமையாளர், சம்மந்தப்பட்டவரின் நேரில் வந்து மன்னிப்பு கேட்டு இருக்கிறார். ஆனால், அவரோ ஆடு தடம் மாறி மேய்ந்த குற்றத்திற்காக, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரைக் கொடூரத்தின் உச்சமாக, தன் சாதியினர் அனைவரது காலிலும் விழ வைத்து சாதிய வன்கொடுமைச் செயலில் ஈடுபட்டுள்ளார். 

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு, வேகமாகப் பரவி வரும் நிலையில் மிகப் பெரிய சர்ச்சைகளுக்கும் அது உள்ளாக்கி இருக்கிறது. இந்த சம்பவம், தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், அந்த வீடியோவைப் பதிவேற்றம் செய்து கடும் கண்டனங்களைத் தெரிவித்து உள்ளார்.

மேலும், இது தொடர்பாக கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாகப் புகாரைப் பேற்றுக்காண்டு, போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்த விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து. இந்த சம்பத்தில் தொடர்புடைய 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன், அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.

இதனிடையே, முகக்கவசம் அணியாத நபரிடம் சாதிப் பெயரைக் கேட்ட விவகாரம் தொடர்பாக, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, மாநில மனித உரிமைகள் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.