நாடு முழுவதும் விவசாயிகளின் “சக்கா ஜாம்” போராட்டக் குரல், ஓங்கி ஒலித்துள்ள அதே வேளையில் விவசாயிகள் ஏங்கித் தவித்து வருகின்றனர். 

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள், கடந்த நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆனால், இதுவரை பல கட்டங்களாகப் பேச்சு வார்த்தை நடத்தியும், இது வரை எந்த ஒரு சுமூக முடிவும் எட்டப்படவிட வில்லை. ஆனாலும், டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.

இதனையடுத்து, போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்றைய தினம் மாலை 3 மணி வரை நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் “சக்கா ஜாம்” என்ற சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் கூறியிருந்தனர்.

அதன்படி அரியானா மாநிலம் பால்வாலில் இன்றைய தினம் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

டெல்லியைப் பொறுத்தவரை, டெல்லியில் உள்ள 12 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் முழுமையாக உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவை அனைத்தும் மூடப்பட்டன. குடியரசு தினத்தன்று வன்முறை நடந்த செங்கோட்டை பகுதியில் இன்றைய தினம் கூடுதலான பாதுகாப்பு போடப்பட்டுப் பாதுகாப்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், டெல்லி ஐடிஓ பகுதியில் சாலைகளுக்கு நடுவில் முள்வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. டெல்லியின் முக்கிய எல்லைகளான திக்ரி, ஷிங்கு, காசிபூரில் மத்திய ரிசர்வ் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் காரணமாக, டெல்லி- என்சிஆர் பகுதியில் 50 ஆயிரம் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதே போல், “சக்கா ஜாம்” போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஷாஜகான்பூர் எல்லையான ராஜஸ்தான் - அரியானா அருகே, தேசிய நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முக்கியமாக, அதிக அளவிலான விவசாயிகள் பஞ்சாபில், அமிர்தசரஸ் மற்றும் மொஹாலியின் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ராஜஸ்தான் மாநில விவசாயிகள் அரியானா மாநில எல்லையான சாஜகான்பூரில் நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஷ்மீரில் ஜம்மு - பதான்கோட் நெடுஞ்சாலையில் அமர்ந்துகொண்ட விவசாயிகள், அதிரடியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர மறியல் என்பதால், அந்த குறிப்பிட்ட நேரத்தில் அந்த பகுதியின் முக்கிய சாலைகளில் எந்த வாகனங்களும் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது.

கர்நாடகத் தலைநகர் பெங்களூர் ஏலகங்காவில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளைக் காவல்துறையினர் கைது செய்தனர். 

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளைத் தாண்டிச் செல்ல முயன்றனர். அப்போது காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவர்களை விரட்டினர். இதனால், அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

அதே போல், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி சென்னை அண்ணா சாலையில் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி  மற்றும் பி.ஆர் பாண்டியன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டனர்.  வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தமிழகம், புதுச்சேரியில் “ஜக்கா ஜாம்” சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். 

குறிப்பாக, டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் விவசாயிகள் இன்று போராட்டத்தில் குதித்தனர். இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவியது.