உலக கோப்பை டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியை தழுவி உள்ளது மிகப் பெரிய விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

7 வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில், முன்னாள் சாம்பியனான இந்திய அணி, தனது 2 வது லீக் போட்டியில் நியூசிலாந்துடன் பலப்பரிட்சை நடத்தியது. 

வாழ்வா - சாவா? என்று, நாக்-அவுட் போட்டியாகவே கருதப்பட்ட இந்த போட்டியில், நியூசிலாந் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

இதன் மூலமாக, இந்தியாவிற்கு அரையிறுதி செல்வதற்கான வழியானது கிட்டத்தட்ட மூடப்பட்டு உள்ளது. இதில், ஒரே ஒரு ஆறுதல் தற்போதைக்கு என்னவென்றால், இந்தியாவின் தொடர் வெற்றி, ரன் ரேட் மற்றும் புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் கடைசி நம்பிக்கையாக இருக்கிறது. 

அத்துடன், இந்த கணிப்பு மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான 10 விக்கெட் தோல்விக்குப் பிறகு, இந்திய அணி பாடம் கற்றுக்கொண்டிருக்கலாம் என்று விமர்சனம் எழுந்தது. ஆனால், மீண்டும் அதில் பல தவறுகள் நடந்திருக்கின்றன.

இந்திய அணியின் இளம் வீரர்கள் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய காரணத்தால், அவர்களில் ஒரு சிலருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.  ஆனாலும், அவர்களால் இந்திய அணியின் வெற்றிக்கு உதவ முடியவில்லை.

ஐபிஎல் தொடங்கப்பட்ட பிறகு இந்தியா அணி டி20 உலக கோப்பையை இது வரை வெல்லவில்லை.  இந்திய அணி இங்கிலாந்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை வழங்குவதற்குப் பதிலாக, ஐபிஎல் தொடரை நடத்தியது பிசிசிஐ.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பயிற்சி ஆட்டங்களை முறையாக ஏற்பாடு செய்யாததன் காரணமாக இந்திய அணி கோப்பையை இழந்தது.  

அதற்க்கு பதிலாக ஐபிஎல்லுக்கு முன்னுரிமை அளித்தது பிசிசிஐ. “ஐபிஎல் உண்மையில் மிகவும் முக்கியமானது என்று கருத்தபட்டால், ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட் மற்றும் அதிக ரன்கள் எடுத்து ஊதா கேப் மற்றும் ஆரஞ்சு கேப் பெற்ற வீரர்கள் ஒருவரை கூட இந்திய அணியில் சேர்க்கவில்லை?” என்கிற விமர்சனமும் தற்போது எழுந்துள்ளது.

அத்துடன், தற்போது நடந்து முடிந்த 2 உலக கோப்பை போட்டிகளிலும் மிக மோசமாக இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 

வெற்றி பெற வேண்டி விளையாடுவது போல் இல்லாமல் கடமைக்கு ஆடுவது போல் இந்திய அணியினர் விளையாடி வருகின்றனர் என்கிற விமர்சனமும் தற்போது எழுந்துள்ளது. 

அரையிறுதிக்கு தகுதி பெற இன்னும் 3 போட்டிகள் உள்ள நிலையில், அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

குறிப்பாக, அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பிசிசிஐ மொத்த அணிகளின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தி உள்ளதால், இந்த சூழல் ஐபிஎல்லை இன்னும் அதிக பணம் சம்பாதிக்கும் யுத்தியாக மாற்றி உள்ளது. இதனால், இந்திய அணியில் உள்ள 11 வீரர்களும் சூப்பர் ஸ்டார்கள் என்றே பார்க்கப்படுகிறார்கள். இந்திய வீரர்கள் கடந்த 2 மாத காலமாக, UAE இல் இருந்த போதிலும், தற்போது உலக கோப்பை போட்டிகளில் அவர்கள் பலரும் படு மோசமாக விளையாடி வருகின்றனர் என்றும் விமர்சிக்கப்படுகின்றனர்.

அதே போல், டீம் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நடந்த இந்த முக்கியமான போட்டியில், கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்தின் முடிவுகளை நேரடியாக கேள்விக்குள்ளாக்கி உள்ளதுடன், பலவிதமான விமர்சனைங்களையும் எழுப்பி உள்ளன.

அத்துடன், “ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் மீண்டும் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று டீம் இந்தியா நிர்வாகம், கேப்டன் விராட் கோலி மற்றும் வழிகாட்டி எம்.எஸ் தோனி ஆகியோரின் உத்தி என்னவென்று தெரியவில்லை?” என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.

குறிப்பாக, பேட்டிங்கிலும் திறமையானவர்கள் பலர் இருந்தும் அவர்களை எல்லாம் ஏன் அணி நிர்வாகம் இன்னும் முறையாக பயன்படுத்தவில்லை என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.