உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளது. 

“கோலிக்கும் கோப்பைக்குமான தூரம் தான் போல!”

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது, இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்றது. அப்போது, பலத்த மழை பெய்ததால், முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல்,  கைவிடப்பட்டது. 

பின்னர், 2 வது நாள் அன்று போட்டி தொடங்கிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 92.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. 

இதனால், நியூசிலாந்து அணி தனது இன்னிங்சை ஆடத் தொடங்கியது. ஆனாலும், இடையிடையே மழை வந்த வண்ணம் இருந்தன. எனினும், நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 99.2 ஓவர்களில் 249 ரன்கள் குவித்திருந்தது. இதில், இந்திய அணி சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

அதன் தொடர்ச்சியாக, 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2 வது இன்னிங்சை தொடங்கியது. அதன் படி, சுப்மான் கில் 8 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இந்த 5 வது நாள் முடிவில் இந்திய அணி 2 வது இன்னிங்சில் 30 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 64 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், இந்திய அணி மொத்தமாக 32 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது.

மழை எதிரொலியாக இந்த டெஸ்ட் போட்டியில் மாற்று நாள் அறிவிக்கப்பட்டு நேற்றைய தினம் 6 வது நாளாக கடைசி நாள் போட்டி நடைபெற்றது.

அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் விராட் கோலி வெறும் 13 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இப்போட்டியில், இரண்டாவது முறையாக, ஜேமிசனின் பந்தில் ஆட்டமிழந்தார் கோலி. இதுவரை, ஆறு இன்னிங்ஸ்களில், கோலிக்கு பந்து வீசி இருக்கும் ஜேமிசன், அதில் 3 சந்தர்ப்பங்களில், அவரது விக்கெட்டை லாபகரமாக எடுத்திருக்கிறார்.

பின்னர், புஜாராவுடன், ரஹானே ஜோடி சேர்ந்தார். அப்போது, ஜேமிசனின் பந்துகளை எதிர்கொள்ள புஜாரா, ரொம்பவே திணறிக் கொண்டிருந்த நிலையில், ஜேமிசனிடமே தனது விக்கெட்டை பறிகொடுத்து அவுட்டானார் புஜாரா. அப்போது, புஜாரா வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். பின்னர், ரகானேவும் நீண்ட நேரம் நிற்கவில்லை. அவரும் எதிர் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அவுட்டானார்.

பின்னர், ரிஷப் பண்டு உடன், டெஸ்ட் ரேங்கிங்கில் ஆல்ரவுண்டர்களில் நம்பர் 1 இடத்தில் இருக்கும், ஜடேஜா களம் இறங்கினார். அப்போது, சிறிது நேரம் நம்பிக்கை அளித்த ரிஷப் பண்டு 41 ரன்கள் சேர்த்து அவுட்டானார். பின்னர், ஜடேஜாவும் 16 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வீரர்களும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்கள்.

இதனால், மொத்தமே 73 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, மொத்தமாகவே 170 ரன்களுக்கு ஆட்டமிழந்து தவித்தது. அப்போதே ஏறக்குறைய எல்லாம் முடிந்துவிட்டது என்பது நன்றாகவேத் தெரிந்தது.

இதனால், இந்திய அணியானர், நியூசிலாந்து அணியை விட 138 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. இதனால், நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

நியூசிலாந்தின் 2 வது இன்னிங்சை டாம் லாத்தம் - டேவான் கவாய் ஜோடி தொடங்கி வைத்தது. இவர்கள் இருவரும், 9 மற்றும் 19 ரன்களில் அவுட்டானார்கள். ஆனால், அதன் பிறகு வந்த அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கும், ராஸ் டெய்லருக்கும் நிதானமாக விளையாடினார்கள். முதல் இன்னிங்சில் தவறவிட்ட அரை சதத்தை, 2 வது இன்னிங்ஸில் அடித்தார் வில்லியம்சன். 

இதனால், அதன் பிறகு வேறு விக்கெட்டுகளை இழக்காமல் மிகவும் எளிமையாகவே இலக்கை எட்டியது. 

போட்டியின் முடிவில் கேப்டன் கேன் வில்லியம்சன் 52 ரன்கள், ராஸ் டெய்லர் 47 ரன்களும் சேர்த்து இறுதி வரை நிலைத்து நின்றனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தூள் கிளப்பி, முதல் டெஸ்ட் சாம்பியன்கள் எனும் மகுடம் சூடியது நியூசிலாந்து அணி. 

கேன் வில்லியம்சன் தலைமையில், நியூசிலாந்து அந்த அணி பெற்றுள்ள முதல் ஐசிசி கோப்பை இதுவே ஆகும்.