டி20 உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட்டுகள் விச்சியாசத்தில் தோல்வி அடைந்து இந்திய அணி, அரையிறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டதட்ட இழந்து உள்ளது.

7 வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில், முன்னாள் சாம்பியனான இந்திய அணி, தனது 2 வது லீக் போட்டியில் நியூசிலாந்துடன் பலப்பரிட்சை நடத்தியது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி, இந்திய அணியின் துவக்க வீரர்களாக இஷான் கிஷன் - கே.எல். ராகுல் ஆகியோர் களமிறக்கினர். 

இதில், 4 ரன்களில் இஷான் கிஷன் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சி அளிக்க களத்தில் நின்ற கே.எல். ராகுல் 18 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். 

இதனால், அடுத்தடுத்து வந்த இந்திய வீரர்கள், நியூசிலாந்து பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அப்படியே திணறினார்கள். பின்னர் வந்த ரோகித் சர்மா 13 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி 9 ரன்னிலும்,  ரிஷப் பண்ட் 12 ரன்களும் எடுத்து மிகவும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். 

இதனையடுத்து, சிறிது நேரம் நிலைத்து நின்ற ஹர்திக் பாண்ட்யாவும் 23 ரன்களில் கேட்ச் ஆனார். இறுதியில் வந்த ஜடேஜா 26 ரன்களும், சமி ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் இந்திய அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இந்த போட்டியில், நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் 9 ஒவர்கள் மட்டும் அதாவது 54 பந்துகள் வெறும் டாட் பாலாக அமைத்தது இந்திய ரசிகர்களை பெரிய அளவில் கவலை அடைய செய்தது. 

இதனையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் குப்தில் - டைரில் மிட்செல் ஜோடி களம் இறங்கினர். 

தொடக்கம் முதலே மிகவும் நிதானமாக விளையாடிய அந்த ஜோடி, குப்தில் 20 ரன்களில் பும்ராவிடம் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த, வில்லியம்சன், மிட்செல் உடன் ஜோடி சேர்ந்து தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இதன் காரணமாக, சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணியானது 13 வது ஓவரில் 96 ரன்கள் எடுத்த போது, மிட்செல்லை 49 ரன்களில் பும்ரா ஆட்டமிழக்கச் செய்தார். என்றாலும், 14.3 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி தனது 110 என்ற எளிய இலக்கை எட்டிப் பிடித்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாக வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலமாக, நியூசிலாந்து அணி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து உள்ளது. 

அதே போல், இந்திய அணியானது தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளதால், புள்ளிப் பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் இருக்கிறது. 

மேலும், இந்த தொடரில் இனி வரும் அடுத்த 3 போட்டிகளில் வெற்றி பெற்ற அதிகமான ரன்ரேட்டை பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினம் என்றே கூறப்படுகிறது. இதனால், இந்திய அணியின் கனவு தற்போது கனவாகிப்போனதாகவே கூறப்படுகிறது.

இந்த தோல்விக்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, “பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நாங்கள் போதுமான அளவுக்கு தைரியமாக செயல்படவில்லை” என்பதை ஒப்புக்கொண்டார்.

“அதே போல் பீல்டிங்குக்கு களம் இறங்கிய போது வீரர்களிடம் போதுமான உத்வேகம், துணிச்சல் இல்லை என்றும், ஆனால் எங்களை விட நியூசிலாந்து வீரர்கள் தீவிரத்துடன் செயல்பட்டனர்” என்றும், குறிப்பிட்டார். 

“இந்திய அணிக்காக விளையாடும் போது நிறைய எதிர்பார்ப்புகள், நெருக்கடிகள் எப்போதும் இருக்கும் என்றும், அதை சமாளித்து தான் விளையாட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.