ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தற்போது 8 அணிகள் விளையாடி வரும் சூழலில், அடுத்த ஆண்டு நடைபெறும் 15 வது ஐபிஎல் போட்டியில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதற்கான ஏலம் இன்று நடைபெறுகிறது.

இதுவரை 14 ஐபிஎல் சீசன்கள் முடிவடைந்து உள்ள நிலையில், அடுத்த ஆண்டு 15 வது ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. 

அத்துடன், ஐபிஎல் கிரிக்கெட் அதுவரையில் மொத்தம் 8 அணிகள் விளையாடி வந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் மொத்தமாக 10 அணிகள் விளையாடும் என்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. 

ஐபிஎல் புதிய அணிகளுக்கான டெண்டர் நடைமுறையை கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.

இந்த டெண்டர் விண்ணப்ப கட்டணமாக 10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனாலும் இதில் மொத்தம் 22 நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பங்களை வாங்கி இருக்கின்றன. இதனால், இந்த முறை அணியின் அடிப்படை விலையாக 2 ஆயிரம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
 
முக்கியமாக, அதானி குழுமம், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம், இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கால்பந்து கிளப்பான மான்செடர் யுனைடெட், கோடாக் குரூப், அரோபின்டோ மருந்து நிறுவனம், ஜிண்டால் ஸ்டீல் ஆகியவை புதிய அணியை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. 

இப்படியாக, புதிதாக சேர்க்க உள்ள இரு புதிய அணியை சில நிறுவனங்களுடன் இணைந்து வாங்க முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்தி நடிகர், நடிகைகளும் விருப்பம் தெரிவித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

குறிப்பாக, இந்த இரு அணிகளும் ஆமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்டு புதிய அணிகள் அமைய வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 

அதே போல் இந்தூர், கவுகாத்தி, கட்டாக், தர்மசாலா, புனே ஆகிய நகரங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளன.

புதிய அணிகளுக்கான டெண்டர் பரிசீலனையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று தொடங்கி உள்ள நிலையில், புதிய அணிகள் பற்றிய விவரம் இன்று அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

புதிய அணிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் முதல், 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என்றும், எதிர்பார்க்கப்படுவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து உள்ளது.

இதனிடையே, இந்த அணிகளை ஏலம் வாங்க பல அணிகள் போட்டி போட்டாலும், அதானி குழுமம் மற்றும் ஆர்பிஎஸ்ஜி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோங்கா ஆகியோர் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். 

அதன்படி, அகமதாபாத் அணியை அதானி குழுமமும், லக்னோ அணியை சஞ்சீவ் கோங்காவும் ஏலம் எடுக்க இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.