மராத்தா இடஒதுக்கீடு சாத்தியமாகும் போது ஏன் வன்னியர் இட ஒதுக்கீடு சாத்தியமாகவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியிருப்பது, "மண்டல் ஆணையத்தால் முற்பட்ட வகுப்பினர் என்று அறிவிக்கப்பட்ட மராத்தா சாதியினர் தங்களுக்கு இட ஒதுக்கீடு கோரி 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில்  21 இடங்களில் பேரணி நடத்தினார்கள். அதையேற்று அவர்களுக்கு 16% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.


மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டம் ஒரே நாளில் (2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி) மராட்டிய சட்டப்பேரவையிலும், சட்ட மேலவையிலும் நிறைவேற்றப்பட்டது. மராத்தா இட ஒதுக்கீடு செல்லும் என மும்பை உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது!


இடஒதுக்கீட்டுக்கு தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்ட சமூகத்திற்கே மராட்டியத்தில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஆனால், மிக மிக மிக பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமுதாயத்திற்கு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது. இதில் தமிழகம் சமூகநீதியின் தொட்டிலாம்!" என்று பதிவிட்டுள்ளார்.