அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், “தொண்டர்கள் புடை சூழ அதிமுக அலுவலகத்திற்கு செல்லப் போவதாக” முன்னதாக சசிகலா அறிவித்துள்ளது, அதிமுகவில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“அதிமுகவில் ஒற்றைத் தலைமை” விவகாரம் தான், கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

அதாவது, அதிமுகவில் தற்போது பூதாகரமாக வெடித்து கிளம்பி இருக்கும் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம், தமிழ்நாட்டு அரசியலில் அடுத்தடுத்து சூட்டை கிளப்பிக்கொண்டு இருக்கிறது. 

இதன் காரணமாக, அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் என்று, 2 பிரிவுகளாக பிரிந்து, இரு தரப்பினரும் எதிரிகளைப் போல் தொடர்ச்சியாக கருத்து யுத்தம் நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தற்போது புதிதாக உச்சக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், “ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது” என்று, இபிஎஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளிப்படையாக கடிதம் எழுதி இருந்தது, அதிமுகவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் “அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்” என குறிப்பிட்டு இருந்ததை, தனக்குத் தானே எடப்பாடி பழனிசாமி அதனை நீக்கி விட்டு, தனக்குத் தானே புதிய பொறுப்புகளையும் கொடுத்துக்கொண்டார். இதுவும், அதிமுகவில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி, அதிமுகவில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்தது.

இந்த சூழலில் தான், ஓபிஎஸ் - இபிஎஸ் என இரு அணிகளும் முட்டி மோதிக்கொண்டு இருக்கும் நிலையில், “நானே அதிமுக பொதுச் செயலாளர்” என்று கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கும் சசிகலாவும், அதிமுகவின் 3 ஆம் ஆட்டத்தில் இணைய காத்திருக்கிறார். 

இந்த நிலையில் தான், இந்த விவகாரம் குறித்து திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் பேசிய சசிகலா, “ஒருவரின் சுய நலத்திற்காக உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை கிடைக்க விடாமல் செய்ததை ஏற்க முடியாது” என்று, விமர்சித்தார்.

குறிப்பாக, “அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் தொண்டர்களுடன் நான் செல்ல இருக்கிறேன் என்றும், அதிமுகவில் இருந்து யார் யாரையும் நீக்க முடியாது” என்றும், சசிகலா வெளிப்படையாகவே தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, பூந்தமல்லியில் தனது தொண்டர்களை சந்தித்துவிட்டு அங்கு பேசிய சசிகலா, “அதிமுகவிற்கு ஒற்றை தலைமை கண்டிப்பாக வேண்டும்” என்று, வலியுறுத்தி கூறினார்.

அதே நேரத்தில், “தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்கின்ற தலைமையாக, தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒரு தலைமையாக இருக்க வேண்டும்” என்றும், சசிகலா வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

அத்துடன், “பண பலமும், படை பலமும் ஒரு தலைமையை தீர்மானிக்க முடியாது என்றும், மக்கள் பலமும், தொண்டர் பலமும் தான் ஒரு தலைமையை தீர்மானிக்கும்” என்றும், மிகத் தெளிவாக அரசியல் பேசினார்.

குறிப்பாக, “தனக்கு ஆதரவாக சிலரை பேச வைத்து விட்டு, நான் தான் அதிமுக கட்சியின் தலைமை என்று தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு வலுக்கட்டாயமாக நாற்காலியை பிடித்து கொண்டு இருந்தால், தலைவராக ஆகிவிட முடியாது” என்றும், எடப்பாடி பழனிசாமியை அவர் மிக கடுமையாக விமர்சித்து பேசினார்.

இதனிடையே, அதிமுகவில் ஒற்றைத் தலைமையை விவகாரம் மிகப் பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தி இருக்கும் நிலையில், “வரும் 11 ஆம் தேதி அறிவிக்கப்படி பொதுக் குழு கூட்டம் நடைபெறுமா? என்கிற சந்துகமும், அப்படியே பொதுக் குழு கூட்டம் நடந்தாலும், அது செல்லுபடி ஆகுமா?” என்கிற கேள்விகளும் எழுந்து உள்ளது. இதனால், அதிமுகவில் எப்போதும் ஒரு பரபரப்பான சூழலும், பெரும் குழப்பமான சூழலும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.