“ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது!” என்று, இபிஎஸ் தற்போது வெளிப்படையாக கடிதம் எழுதி உள்ளது, அதிமுகவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்து கிளம்பி இருக்கிறது. இதுனால், தமிழ்நாட்டு அரசியலில் தற்போது அடுத்தடுத்து புயல் வீசத் தொடங்கி இருக்கிறது.

இதன் காரணமாக, அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் என்று, 2 பிரிவுகளாக பிரிந்து, இரு தரப்பினரும் எதிரிகளைப் போல் பாவனை செய்து வரும் சம்பவங்கள் தற்போது ஒவ்வொன்றாக அரங்கேறத் தொடங்கி உள்ளன.

இந்த விவகாரம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம்” என்றும், கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Admk

அதன் தொடர்ச்சியாகவே, அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்து கிளம்பி இருக்கும் நிலையில், எம்.ஜி.ஆரால் எழுதப்பட்ட அவரது உயிலில் “அதிமுக ஒற்றை தலைமை” குறித்து சொல்லப்பட்ட ரகசியமும், வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் தான், “தலைமைக்‌ கழக நிர்வாகிகள்‌ ஆலோசனைக்‌ கூட்டத்திற்கு புறக்கணித்த நிலையில்‌, தற்போதைய தங்களின்‌ இந்தக்‌ கடிதம்‌ ஏற்படையதாக இல்லை என்றும், கட்சியை செயல்படாத நிலைக்குக்‌ கொண்டு செல்வதற்கான அனைத்துப்‌ பணிகளையும்‌ செய்தீர்கள்” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு தற்போது பதில் கடிதம் எழுதி உள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்லத்திற்கு எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த 23.6.2022 அன்று நடைபெற்ற அதிமுக‌ பொதுக் குழுவில்‌, 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால்‌ கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள்‌ அங்கீகரிக்கப்படவில்லை என்றும், இதனால்  அந்த சட்ட திட்ட திருத்தங்கள்‌ காலாவதி ஆகிவிட்டது என்றும, எனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ என்ற உணர்வில்‌ தாங்கள்‌ எழுதியுள்ள கடிதம்‌ செல்லத்தக்கதல்ல” என்றும், அறிவித்து உள்ளார்.

அத்துடன்‌, “உள்ளாட்சி அமைப்புகளில்‌ தற்போது காலியாக இருக்கும்‌ பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்‌ செய்வதற்கு கடைசி நாள்‌ 27.6.2022 அன்று முடிவுற்ற நிலையில்‌, இத்தனை நாட்கள்‌ பொறுத்திருந்து, கழகத்தின்‌ வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும்‌ 27.6.2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக்‌ கழக நிர்வாகிகள்‌ ஆலோசனைக்‌ கூட்டத்திற்கு தாங்கள்‌ உட்பட அனைவருக்கும்‌ முறையாக தகவல்‌ தெரிவிக்கப்பட்டு, மொத்தம்‌ உள்ள 74 தலைமைக்‌கழக நிர்வாகிகளில்‌ 65 பேர்‌ கலந்துகொண்டனர் என்றும், அப்போது 4 பேர்‌ உடல் நிலை சரியில்லை என்று தகவல்‌ தெரிவித்திருந்தனர்‌ என்றும், தாங்கள்‌ அந்தக்‌ கூட்டத்தை புறக்கணித்த நிலையில்‌, தற்போதைய தங்களின்‌ இந்தக்‌ கடிதம்‌ ஏற்படையதாக இல்லை” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், “நாம்‌ இருவரும்‌ கூட்டாக அழைப்பு விடுத்த அதிமுக பொதுக்குழுவை நடத்தவிடாமல்‌ தடுத்து நிறுத்துவதற்காகத்‌ தாங்கள்‌, ஆவடி காவல்‌ ஆணையருக்கு கடிதம்‌ மூலம்‌ புகார்‌ அளித்தும்‌, நீதிமன்றங்களின்‌ மூலம்‌ வழக்குகளைத்‌ தாக்கல்‌ செய்தும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தை செயல்படாத நிலைக்குக்‌ கொண்டு செல்வதற்கான அனைத்துப்‌ பணிகளையும்‌ செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையுதாக இல்லை என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌” என்றும், எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாகவே தெரிவித்து உள்ளார். 

முன்னதாக, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், “உள்ளாட்சி தேர்தல் படிவத்தில் கையெழுத்திட தான் தயாராக இருப்பதாக” கூறியிருந்தார். 

அத்துடன், “இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட தயாரா?” என்று, அந்த கடிதத்தில் கேட்டிருந்தார்.

இப்படியாக, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியதும், அதே போல் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி, “ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது” என்று, வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது, அதிமுகவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.